ஆன்மிகம்

ஏர்வாடி தர்காவில் நடந்த கொடியேற்று விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2016-08-16 05:44 GMT   |   Update On 2016-08-16 05:44 GMT
ஏர்வாடி தர்கா சந்தனக் கூடு திருவிழாவையொட்டி நடந்த கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 26-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் ஸைய்யது இப்ராகீம் ‌ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள கொடியேற்றம், சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கம் நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். நடப்பாண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது.

நேற்று முன்தினம் தர்கா வளாகத்தில் உள்ள கொடி மேடையில் 40 அடி உயர அடிமரம் ஏற்றப்பட்டது. முன்னதாக உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கம் வேண்டியும் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்தார்.

இதை தொடர்ந்து நேற்று ஏர்வாடி முஜாபிர் நல்ல இபுறாகிம் மகாலில் இருந்து வாத்தியங்கள், வாண வேடிக்கைகளுடன் யானை, ஒன்பது குதிரைகள் முன் செல்ல அலங்கார ரதத்துடன் கொடி ஊர்வலம் புறப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலத்தில் இந்து இளைஞர்கள் பிறைக் கொடிகளை ஏந்தியபடி அணிவகுத்து வந்தனர்.

ரத ஊர்வலம் தர்கா வளாகத்தை மூன்று முறை வலம் வந்தது. இரவு 7.20 மணிக்கு பக்தர்களின் ‘நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர்’ என்ற தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினர். அப்போது இந்து பெண்கள் குலவையிட்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

மாவட்ட அரசு ஹாஜி சலாஹூத்தீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்னதாக தர்காவில் பாதுஷா நாயகத்தின் புகழ் மாலையை தர்ஹா ஹக்தார்கள் ஓதினர். கீழக்கரை டி.எஸ்,பி,. மகேஸ்வரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கீழக்கரை தாசில்தார் தர்மன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 26-ந்தேதி சந்தனக்கூடு, 27-ந்தேதி சந்தனம் பூசுதல், செப்.3-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

தர்கா ஆணையர் ராமராஜன் தலைமையில், தர்ஹா ஹக்தார்கள் அம்ஜத் ஹூசைன், துல்கருணை பாட்சா, செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, செய்யது சிராஜ்தீன், அசன் இபுராகிம், முகம்மது பாக்கீர் சுல்த்தான், கோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை செய்யது இபுராகிம், அகமது இபுராகிம், அஜ்முல் ரக்மான், ஊராட்சி செயலர் அஜ்மல் கான் உள்பட ஏராளமானோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Similar News