ஆன்மிகம்

மன அழுத்தங்களுக்கு மருந்து மாமறை

Published On 2016-08-12 10:11 IST   |   Update On 2016-08-12 10:11:00 IST
உலக மாமறையில் தேடுங்கள், உங்களுக்கான வழிகள் ஏராளமாய் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.
இன்றைய காலச்சூழ்நிலையில் மனிதன் இயற்கை சார்ந்த வாழ்வியலைத் தொலைத்துவிட்டு, இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றான். இந்த வேக வாழ்வின் விளைவாக மனிதனுக்கு கிடைத்தவை- சோர்வு, சோகம், எரிச்சல், கோபம்.

குடும்ப சூழல், சமூக சூழல், பாலியல் பிரச்சினைகள், பிறரின் அணுகுமுறை, மற்றவர் களின் இடையூறுகள் போன்றவை மனிதர்களிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. தீர்க்கப்படாத இந்த உணர்வுகள் படிப்படியாய் அழுத்தம் பெற்று, ‘மன அழுத்தம்’ என்ற தடுமாற்ற நிலையை விளைவித்து விடுகிறது. இதற்கு ‘டென்ஷன்’, ‘டிப்ரஷன்’, ‘மனஉளைச்சல்’ என்று உளவியல் வல்லுனர்கள் பெயரிட்டு வகைப்படுத்துகின்றனர்.

வேலைப்பளு, நேரமின்மை, பதற்றமான சூழ்நிலைகள் போன்றவற்றால் மனிதன் யோசிப்பதற்கே பயப்படுகின்றான். ஒருமுகப்படுத்தப்படாத சிந்தனைகளால் இயல்பு நிலைமாறி மனம் அலைபாயத் தொடங்கும். இதனால் அட்ரனலின் என்ற சுரப்பி அதிகமாக சுரக்கத் தொடங்கும். சரியாய் இயங்கிக் கொண்டிருந்த மூளை இதனால் தடுமாறத் தொடங்கும். மூளையின் மாறுபட்ட செயலால் நரம்பு மண்டலங்களிடையே கட்டளைகள் சரிவர கிடைக்கப் பெறாமல் நரம்பு தளர்ச்சியும் உண்டாகிறது.

எண்ணங்கள், செயல்பாடுகளின் எதிர்மறை விளைவுகள் மட்டுமே இதற்கு காரணமாய் அமைகின்றன. உளவியல் அடிப்படையில் இளைஞர் களிடையே இது மிக அதிக அளவில் காணப் படுகிறது. அதனை எப்படி கையாளுவது என்பது தெரியாமல் எத்தனையோ உயிரிழப்புகள், சோக முடிவுகள் என்று எங்கும் ஒரு பரிதாப சூழ்நிலை.

இந்த மன அழுத்தங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் மிக அழகிய தீர்வுகளைச் சொல்லித்தருகிறது. முதலாவதாக தொழுகையைச் சொன்னது:

‘எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’ (2:45).

நபிகள் நாயகம் எந்த பிரச்சினை வந்தாலும் தொழுகையை நோக்கி விரைந்து வருவார்கள்.

பத்ர் யுத்தம், மிக சொற்பமான வீரர்கள். எதிர்கொள்ள வேண்டியது மிக பலம் பொருந்திய வீரர்கள் நிரம்பிய படை. தோற்றால் இஸ்லாம் மொத்தமாக அழிந்துவிடும் ஆபத்து. எத்தனை மன உளைச்சல் மாநபிக்கு. கலக்கம் கொள்ளவில்லை. அன்று இரவு முழுவதும் நின்று தொழுதார்கள். இறைவன் அருளால் சூரியன் உதித்தான்; இன்னல்கள் அகன்றன. இஸ்லாம் இவ்வுலகம் முழுவதும் ஒளி சிந்தி மிளிர்ந்தது.

தொழுகையைத் தொடர்ந்து துஆவை கற்றுத்தருகிறது திருக்குர்ஆன். பிரச்சினைகள் இல்லாதவன் என்று ஒருவனுமே இல்லை. எல்லோருக்கும் அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் பிரச்சினைகளின் அளவுகள் உள்ளன. ஆனால் அந்த பிரச்சினைகள் பகிரப்படாமல் ஒன்றன் மேல் ஒன்று படியத்தொடங்கும் போது மன அழுத்தம் மேலோங்குகிறது.

‘உண்மை தான். ஆனால் என்னுடைய பிரச்சினைகளை யாரிடம் சென்று பகிர்ந்து கொள்வது? உறவினரா?, நண்பனா? அங்கே அவனுக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறதே?’.

அல்லாஹ் சொல்கின்றான்: ‘என்னிடம் வாருங்கள் என்று’.

இரவின் கடைசி பகுதியில் கீழ்வானத்தில் வந்து அல்லாஹ் மனிதர்களிடம் சொல்கிறான்...

‘என்னிடம் வாருங்கள், உங்கள் துக்கங்களைச் சொல்லுங்கள், உங்களுக்கு வேண்டியதை கேளுங்கள், அள்ளித் தர நான் காத்திருக்கிறேன். என் கஜானா என்றுமே குறைந்து விடுவதில்லை. ஆரோக்கியம் வேண்டுமா? ஐஸ்வர்யம் வேண்டுமா? எல்லாம் என் வசமே. கேளுங்கள் தருகிறேன்’ என்கின்றான்.

அந்த அல்லாஹ்விடம் நம் இரு கைகளை ஏந்தி கேட்பதன் மூலம் நம் மனக்குறைகளை ஒப்படைப்போம். அவன் மனநிம்மதியைத் தருவான். அல்லாஹ்விடம் பகிர்ந்து கொள்ளும் போது பரிகாரம் நிச்சயம் உண்டு.

அடுத்து திருக்குர்ஆன் கூறுகிறது:

‘நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள். மேலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க’ (13:28).

அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்யுங்கள். இதயங்கள் அமைதி பெறும். மன அழுத்தங்கள் குறைய மனிதன் எந்த நிம்மதியை, அமைதியை நாடுகின்றானோ அது இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும்.

அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்தல் என்பது இறைவனை துதித்தல், தியானித்தல், நினைவு கூர்தல், அவனிடம் வேண்டுதல் என்ற பல பொருளில் வரும். எந்தப் பெயரில் அழைத்தாலும் ‘திக்ர்’ என்ற இதயத்தின் உயிரோட்டம், மனிதனை அல்லாஹ்விடம் நேரடித் தொடர்பில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ்வின் நினைவுகளால் நிரம்பிய நெஞ்சில் மன அழுத்தத்திற்கு எங்கே இடம் இருக்கும்?

ஒரு கூட்டம் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக அமர்ந்துவிட்டால் வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருள் அங்கே பொழிய ஆரம்பிக்கும். அல்லாஹ்வும் அவர்களை நினைவு கூர்வான். (முஸ்லிம்)

எனவே குர்ஆனை சிரத்தையோடு ஓதுங்கள். மனங் களில் நிம்மதி நிறைவதை உணர்வீர்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வின் அர்ஸின் நிழல் கிடைக்கும். நிம்மதி மட்டும் கிட்டிவிட்டால் மனங்கள் பேதலிக்க வழியே இல்லாமல் ஆகிவிடும்.

எனவே மனஉளைச்சல்களை மாற்றிக் கொள்வதற்கு உயிரை மாய்த்துக் கொள்வதோ, மனங்களை மயக்கும் மாற்று வழிகளை தேடுவதோ உகந்ததல்ல. உலக மாமறையில் தேடுங்கள், உங்களுக்கான வழிகள் ஏராளமாய் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.

-எம். முஹம்மது யூசுப், உடன்குடி.

Similar News