ஆன்மிகம்

நற்செயல்களை தொடர்ந்து செய்வோம்

Published On 2016-07-30 11:56 IST   |   Update On 2016-07-30 11:56:00 IST
இஸ்லாம் எப்போதுமே மனிதனால் முடியாத ஒன்றை செய்யும்படி சொல்வதேயில்லை, சொன்னதும் இல்லை.
நாம் நற்செயல்கள் செய்வது பெரியதல்ல, அதை நாள்தவறாது தொடர்ந்து செய்வதுதான் சிறப்பானது. இது சிரமம் நிறைந்ததாக இருந்தாலும், நம்மால் முடியாத ஒன்றல்ல. இஸ்லாம் எப்போதுமே மனிதனால் முடியாத ஒன்றை செய்யும்படி சொல்வதேயில்லை, சொன்னதும் இல்லை.

நபிகளார் நவின்றார்கள்: ‘அமல்களில் மிகச்சிறந்தது, அது சிறியதாக இருந்தாலும் அதைதொடர்ந்து நிரந்தரமாகச் செய்வதே’. (நூல்: முஸ்லிம்)

ஒருமுறை நபிகளாரிடம், சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர், ‘இறைத்தூதரே, இஸ்லாமைப்பற்றி எனக்கு தெள்ளத்தெளிவாக சொல்லித்தாருங்கள். இதற்குப்பிறகு வேறுயாரிடமும் நான் கேட்கவே மாட்டேன்’ என்றார்.

‘அல்லாஹ்வை நான் முழுமையாக நம்பிக்கை கொண்டேன் என்று சொல். பிறகு அந்த நம்பிக்கையிலேயே நீ நிரந்தரமாய் நீடித்து நிலைத்திரு’ என்று நபிகளார் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒரு காரியத்தில் நாம் நிரந்தரமாய் இருப்பதற்கு இஸ்லாமிய மொழியில் ‘இஸ்திகாமத்’ என்று சொல்லப்படும். இது அனைத்துவிதமான காரியங்களுக்கும் மிக அவசியமானது. உலக விஷயங்களில் எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து, இடைவெளி இன்றி செய்ய வேண்டும் என்று எண்ணுகிற நாம், இறைவனுக்குச் செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகளில் கவனக்குறைவாக இருப்பது வருந்தத்தக்கது ஆகும்.

ரமலான் மாதத்தில் மட்டும் விழுந்து விழுந்து இரவு-பகலாகத் தொழுத நாம் இப்போது எப்படியிருக்கிறோம்?. நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. ‘இபாதத்’ எனும் இறைவணக்கம் ஒரு குறிப்பிட்ட கால, நேரத்தில் செய்ய வேண்டிய ஒன்று தானே தவிர அவை குறிப்பிட்ட காலத்தில் மட்டும்செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல.

அல்லாஹ் கூறுகிறான்: ‘நபியே நீர் உமது இரட்சகனை நம்பிக்கை (எனும் மரணம்) வரும் வரை வணங்குவீராக’ (திருக்குர்ஆன்-15:99)

‘இறை வணக்கம் அது அவரவர் இறப்பு வரைக்கும்’ என்ற செய்தியை இவ்வசனம் கூறுகிறது. நாம் நினைத்த போது இறைவனை வணங்குவதும், இதர நேரங்களில் அவனை மறந்திருப்பதும் எவ்வகையில் சரி?

நமது மூச்சுக்காற்று எங்கேயும், எப்போதும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, இரவு-பகலாக ஓய்வின்றி இயங்குவது போல இறைவனுக்கான நமது இறை வணக்கம் எங்கேயும், எப்போதும் குறைவின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ‘ஜின் இனத்தையும், மனித இனத்தையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை’ (திருக்குர்ஆன் 51:56).

மனிதப்படைப்பின் அசல் நோக்கமே அல்லாஹ்வை அயராது வணங்கிக்கொண்டிருப்பது தான். அவனை வணங்குவது என்பது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என இக் கடமைகளில் மட்டும் இல்லை. ‘ஒரு ஏழையின் சிரிப்பில் ஏக இறைவனைக் காணலாம்’ என்பது போல நமது வணிகம், வேலை, சேவை, பணிவிடை, உதவி, ஆதரவு, அரவணைப்பு, மருத்துவம் என அனைத்திலும் இருக்கிறது அந்த இறைவணக்கம்.

நபிகளார் நவின்றார்கள்: ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை 77 கிளைகளைக் கொண்டது. அதில் உயர்ந்தது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ எனும் திருக்கலிமாவாகும். அதில் தாழ்ந்தது நடைபாதையில் கிடக்கும் நோவினை (பொருட்)களை அகற்றுவதாகும். வெட்கம் கொள்வதும் ஈமானின் ஒரு கிளையே’. (நூல்: புகாரி)

நமது வணக்கங்கள், வழக்கங்கள் என அனைத்தும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டவை. அவற்றில் நாம் எதைச் செய்தாலும் அதை அல்லாஹ்வுக்காக, அவனது கட்டளைப்படி செய்யும்போது அவையாவும் ‘இபாதத்’ எனும் இறைவணக்கமாக மாறி விடுகிறது. இஸ்லாம் நமக்கு அனுமதித்துள்ள முறையில் ஒருவர் வியாபாரம் செய்தால் அதுவும் ஒரு வணக்கம் என்று சொல்லி நல்வழிகாட்டியவர்கள் தான் நமது நபிகளார்.

ஆக, இறைவணக்கம் என்பது பல்வேறு பாதைகளைக் கொண்டது. அவற்றில் நாம் அயராது தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அது சிறியதொரு அமலாக இருந்தாலும் சரியே.

நபிகளார் ‘மிஅராஜ்’ எனும் அற்புதமிகு விண்ணகப் பயணத்தை முடித்துக்கொண்டு மண்ணகம் வந்தபோது தோழர் பிலாலை அழைத்து ‘உமது காலணியின் நடையோசையை நான் சுவனத்தில் செவியுற்றேனே அதற்கு நீர் அப்படியென்ன நல்லமல் செய்தீர்?’ என வினவினார்கள்.

அதற்கு, ‘தூதரே, நான் எப்போதுமே ‘ஒளு’ எனும் கை, கால், முக உறுப்புத்தூய்மையுடன் தான் இருப்பேன்’ என்றார்கள். ‘ஆம், அதுதான் காரணம்’ என பிறகு அதை உறுதிப் படுத்தவும் செய்தார்கள் நம் நபியவர்கள். (நூல்: மிஷ்காத்)

இன்னொரு முறை ஹாரிஸ் இப்னு நுஅமான் என்ற நாயகத்தோழரிடம், ‘தோழரே, நீர் குர்ஆன் ஓதும் இனிய குரலோசையை சுவனத்தில் நான் கேட்டேனே. அதற்கு நீர் என்ன அமல் செய்தீர்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் ‘என் தாயாருக்கு எப்போதுமே நான் பணிவிடை செய்துகொண்டே இருப்பேன்’ என்றார். ‘ஆம், அதுதான் காரணம்’ என்று உடனே பதில் மொழி பகர்ந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: மிஷ்காத்)

இப்படியாக எண்ணற்ற அளவில் சின்னச்சின்ன சம்பவங்கள் நிறைய உண்டு. அவை யாவையுமே நமக்கு கற்பிக்கும் செய்தி ‘நாம் எந்தவொரு செயலையும், அமலையும் விடாமல் செய்ய வேண்டும்’ என்பதே.

நன்மையான காரியங்களில் மட்டும் அல்ல, தீமையான காரியங்களிலும் நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

உதாரணமாக பொய் பேசுதல். இது ஒரு சாதாரணச் செயல்தானே என எண்ணலாம். ஆனால், அது அல்லாஹ்வின் பார்வையில் பெருங்குற்றமாக பதிவு செய்யப்படும்.

சிறியதோ, பெரியதோ எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடர்ந்து நாள்தோறும் தவறாது செய்து வருவதில் தான் நமது சாதனையே இருக்கிறது. ‘ஒரே செயலில் ஒருவர் நிலைத்திருப்பது என்பது அதுவே ஓர் அற்புதம்’ என்பார்கள் நமது இறைநேசச்செல்வர்கள். ஆம், அற்புதங்களைச் செய்து காட்டுவது மட்டும் அற்புதம் அல்ல, அற்ப காரியங்களையும் அற்புதமாய் செய்து காட்டுவதுதான் பேரற்புதம்.

வாருங்கள், நற்செயல்களைச் செய்வோம், அதை நாள் தவறாது செய்வோம்.

Similar News