ஆன்மிகம்

மரணத்தைத் தீர்மானிப்பவன் இறைவன் மட்டுமே

Published On 2016-07-29 10:07 IST   |   Update On 2016-07-29 10:07:00 IST
ஸபா நாட்டின் அரசி பல்கீஸ், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் சுலைமான் (அலை) அவர்களையும் நம்பி ஓரிறைக் கொள்கையை ஏற்றக்கொண்டார்.
ஸபா நாட்டின் அரசி பல்கீஸ், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் சுலைமான் (அலை) அவர்களையும் நம்பி ஓரிறைக் கொள்கையை ஏற்ற பின் தன் நாட்டிற்குத் திரும்பினார்

மக்களிடம் உண்மைகளை எடுத்துரைத்தார். ஓரிறைக் கொள்கையைப் பற்றிப் போதித்தார். மக்களும் அரசி சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து சூரியனை வணங்குவதைக் கைவிட்டனர்.

மக்களும் இறைவழியில் மிகவும் நல்லமுறையில் நேர்மையாகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் ஓரிறைக் கொள்கை நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.

சுலைமான் (அலை) அவர்கள், பல்வேறு பிரிவினரை ஒன்றுபடுத்தும் வகையில் ஓரிறைக் கொள்கையைப் போதித்து வந்தார்கள். காற்றை இறைவன் தமது தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்தித் தந்ததால் அதன் மூலம் பல இடத்திற்குப் பயணப்பட்டுப் போதித்து வந்ததோடு, ஜின்களை வைத்து பல விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். குறிப்பாக சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிடித்தமான கட்டடங்களை உருவாக்கவும், சிற்பங்களைச் செதுக்கவும், பாறைக் குவிமாடம் அமைந்த பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் ஜின்களை ஈடுபடுத்தினார்கள்.

என்னதான் இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களுக்கு இதையெல்லாம் இறைவன் வசப்படுத்தித் தந்திருந்தாலும், முழுக்கட்டுப்பாட்டுடையவன் அல்லாஹ் ஒருவனே, அகிலங்களை ஆளும் அவனுக்குத்தான் அழிவில்லை என்ற உண்மையை மக்களும் ஜின்களும் அறியும் வகையில், சுலைமான் (அலை) ஜின்களுக்கு வேலையை ஏவி விட்டு உட்கார்ந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள். சுலைமான் (அலை) அவர்கள் ஊன்றி உட்கார்ந்திருந்த ஊன்றுகோலை கரையான் அரிக்கவே, அவர்கள் தலைசாய்ந்து இயற்கை எய்தினார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

திருக்குர்ஆன் 34:12-14

- ஜெஸிலா பானு.

Similar News