ஆன்மிகம்

எறும்புகளிடமிருந்து பாடம் கற்ற சுலைமான்(அலை)

Published On 2016-07-21 07:15 IST   |   Update On 2016-07-21 07:15:00 IST
ஓர் எறும்பு தன் சமுதாயத்தைக் காத்துக் கொள்ள மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்ததைக் கண்டு, அதில் தமக்குப் படிப்பினை இருப்பதாக உணர்ந்த சுலைமான் (அலை) தானும் தன் மக்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதியெடுத்தார்கள்.
ஓர் எறும்பு தன் சமுதாயத்தைக் காத்துக் கொள்ள மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்ததைக் கண்டு, அதில் தமக்குப் படிப்பினை இருப்பதாக உணர்ந்த சுலைமான் (அலை) தானும் தன் மக்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதியெடுத்தார்கள்.

ஜெருசேலத்தில் அல்லாஹ்வை வழிபட மிகப் பெரிய வணக்கத் தலத்தைக் கட்டினார்கள். அதுதான் இன்றும் நம்மிடையே இருக்கும் ‘பாறை குவிமாடம் (Dome of the Rock)’ என்பது. இது ஜெருசேலத்தின் பழைய நகரில் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு சுலைமான் (அலை) தமது படைபரிவாரங்களுடன் சென்று தொழுதார்கள்.

தண்ணீர் தேவையிருந்த நேரத்தில் தண்ணீர் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய ஹுத்ஹுத் பறவையைத் தேடினார்கள். “ஹுத்ஹுத் பறவையைக் காணவில்லையே எங்கே?” என்றவர்கள் அது யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டதென்று கடுமையான கோபம் கொண்டார்கள். ஹுத்ஹுத் எங்கே சென்றது என்று தகுந்த காரணம் சொல்லியாக வேண்டுமென்று சுலைமான் (அலை) நினைத்த மாத்திரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.

"வானத்தில் வெகு உயரத்தில் பறந்து பல பகுதிகளைப் பார்வையிட்டபோது, ஒரு சிறிய நகரத்தைக் கண்டேன்" என்றது ஹுத்ஹுத். சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரியாத ஒரு நகரத்தைப் பற்றிச் சொன்னவுடன் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.

“ஒரு பெண் ஆட்சி புரியும் ‘ஸபா’ நகரத்தை நான் கண்டேன். அவர்களுக்குத் தேவையான எல்லாப் பொருளும் அங்குள்ளது. மிகப் பிரம்மாண்டமான அழகிய அரியாசனமும் அந்த அரசிக்கு இருக்கிறது. அந்த அரசியின் பெயர் பல்கீஸ். அரசியும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை வழிபடாமல் சூரியனை வணங்குவதை நான் கண்டேன்.

இதைக் கேட்ட சுலைமான் (அலை) பதற்றமடைந்தார்கள். அந்த மக்களை நேர்வழிப்படுத்த வேண்டுமென்று உடனே அரசி பல்கீஸுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் “பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம். ‘அல்லாஹ்’ அவனையன்றி வணக்கத்திற்குரிய இறைவன் வேறு இல்லை. அவன் மகத்தான அருளாளன்.. ஏக இறைவனை முற்றிலும் வழிபட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” என்று கடிதம் எழுதி அதை ஹுத்ஹுத் பறவையிடம் கொடுத்து ஸபா நகர அரசி பல்கீஸிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்கள்.

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் ஆணையின்படி ஹுத்ஹுத் பறவையும் அரசி பல்கீஸ் பார்க்கும்படி அந்தக் கடிதத்தை அவர்கள் முன் போட்டுவிட்டு, அது சம்பந்தமாக அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றிக் கேட்பதற்காக ஓரிடத்திற்குச் சென்று மறைவாக உட்கார்ந்து கொண்டது.

திருக்குர்ஆன் 27:20-28

- ஜெஸிலா பானு.

Similar News