ஆன்மிகம்

தாவூத்(அலை) வழங்கிய தீர்ப்பு

Published On 2016-07-15 09:39 IST   |   Update On 2016-07-15 09:40:00 IST
தாவூத்(அலை)யிடம் நியாயமான தீர்ப்பு கிடைக்குமென்று நம்பி வந்திருந்த வழக்காளிகள்.
தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் இரு பொறுப்புகளை வழங்கியிருந்தான். அரசனாக மிகவும் திறனுடன் ஆட்சி செய்து வந்த தாவூத் (அலை), மக்களை ஓர் இறைத்தூதராகவும் நல்வழிப்படுத்தி வந்தார். ஓரிறைக் கொள்கையைப் போதித்து, நல்லறங்கள் புரியவும் வலியுறுத்தி வந்தார்.

தாவூத் (அலை) ஆட்சியாளராக எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். வழக்குகளில் மிகவும் நியாயமான தீர்ப்புகளை வழங்கி வந்தார்கள்.

ஒருநாள் தாவூத் (அலை) அவர்களின் தொழுகின்ற இடத்தைத் தாண்டி, இருவர் நுழைந்து விட்டதைக் கண்டு தாவூத் (அலை) திடுக்கிட்டார்கள்.

அப்போது அவர்கள் “நாங்கள் வழக்காளிகள். எங்களுக்கு இங்கு நியாயமான தீர்ப்பு கிடைக்குமென்று நம்பி வந்திருக்கிறோம்” என்றார்கள்.

தாவூத் (அலை) அவர்களும் “வழக்கென்ன?” என்று கேட்டார்கள்.

அதில் ஒருவர் கூறினார் “என்னுடைய சகோதரரிடம் தொன்னூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரேயொரு ஆடுதான் உள்ளது. அதையும் தனக்கே தந்துவிடும்படி என் சகோதரர் கேட்டு வாதாடுகிறார்” என்றார்.

அதைக் கேட்ட உடனே தாவூத் (அலை), “உனது ஆட்டையும் தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் அவர் உமக்கு அநீதி இழைத்துவிட்டார். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர மற்றவர்கள் இப்படித்தான் அநீதி இழைக்கின்றனர்” என்று கூறினார்.

உடனே வழக்காளிகளாக வந்தவர்கள் மறைந்துவிட்டனர். அதைக் கண்டதும் இறைவன் தம்மைச் சோதிக்கவே இவர்களை அனுப்பி வைத்திருக்கிறான், தாம் தவறான தீர்ப்பு வழங்கிவிட்டோம். ஒருவரின் வாதத்தை மட்டுமே கேட்டு, மற்றவர் அவருக்கு அநீதி இழைத்துவிட்டதாகப் பேசிவிட்டதை உணர்ந்து இறைவனிடம் உடனடியாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார்கள்.

இறைவன், தாவூத் (அலை) அவர்களை மன்னித்து, மனோ இச்சையைப் பின்பற்றித் தீர்ப்பு வழங்காமல் மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்கும்படியும் கட்டளையிட்டார்கள்.

“அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்போர், விசாரணை நாளை அதாவது மறுமை நாளை மறப்பவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு” என்றும்  எச்சரித்த இறைவனின் வாக்கின்படி அதன்பிறகு தாவூத் (அலை) எல்லாச் சூழல்களிலும் இருவர் தரப்பு நியாயங்களையும் கேட்ட பிறகே தீர்ப்பு வழங்கினார்கள்.

திருக்குர்ஆன் 38:20-26

- ஜெஸிலா பானு.

Similar News