ஆன்மிகம்

மூஸா(அலை) அவர்களின் மறைவு

Published On 2016-07-01 09:36 IST   |   Update On 2016-07-01 09:36:00 IST
வாழ்வில் மிகவும் திருப்தியை அடைந்தவராக, தன்னுடைய மரணத்தைப் பற்றி தெரிந்து அதனை வரவேற்று, இறைவனை சந்திக்கப் போகிறோமென்று அமைதியான மனநிலையில் உயிரை துறந்தவர்.
மூஸா (அலை) அவர்களிடம் உயிர் பறிக்கும் வானவரான ‘மலக்குல் மவ்த்’ அனுப்பப்பட்டார். மூஸா (அலை), அந்த வானவரை அவருடைய கண் முழி பிதுங்கும் அளவுக்கு முகத்தில் அறைந்துவிட்டார்கள்.

அந்த வானவர் வந்த வழியே திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் “இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்” என்று கூறினார். அல்லாஹ் அந்த வானவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, “நீ மீண்டும் அவரிடம் திரும்பிச் சென்று, அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். மூஸாவின் கை காளை மாட்டின் முதுகிலுள்ள எத்தனை முடிகளை அடக்கிக் கொள்கிறதோ, அத்தனை ஆண்டுகள் அவருடைய ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். அதாவது ஒவ்வொரு முடிக்குப் பதிலாக ஓர் ஆண்டென்று கணக்கிட்டு அத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு என்று சொல்” எனக் கூறி அந்த வானவரை மீண்டும் மூஸா (அலை) அவர்களிடம் இறைவன் அனுப்பி வைத்தான்.

அவ்வாறே அந்த வானவர் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்று இறைவன் சொன்னதை கூறியபோது, அதற்கு மூஸா (அலை) “இறைவா! அத்தனை காலம் வாழ்ந்து முடித்த பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், “மரணம்தான்” என்று பதிலளித்தான். உடனே மூஸா (அலை) அவர்கள் “அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்விடம் ‘பைத்துல் முகத்தஸ்’ என்னும் புனித பூமிக்கு அருகில், அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு வேண்டினார்கள்.

இந்த நிகழ்வை பற்றித் தம் தோழர்களுக்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) சொன்னபோது, “நான் மட்டும் இப்போது பைத்துல் முகத்தஸில் இருந்திருந்தால் சாலையோரமாக செம்மண் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று கூறியதாக ஸஹிஹ் புகாரி நூலில் பதிவாகியுள்ளது.

மூஸா (அலை) அல்லாஹ்விடம் நேரடியாகப் பேசிய பாக்கியத்தைப் பெற்றவர். வாழ்வில் மிகவும் திருப்தியை அடைந்தவராக, தன்னுடைய மரணத்தைப் பற்றி தெரிந்து அதனை வரவேற்று, இறைவனை சந்திக்கப் போகிறோமென்று அமைதியான மனநிலையில் உயிரை துறந்தவர். இறைவனின் சாந்தியும் சமாதானமும் மூஸா (அலை) அவர்கள் மீது உண்டாவதாக.

ஸஹிஹ் புகாரி 2:23:1339, 4:60:3407

- ஜெஸிலா பானு.

Similar News