ஆன்மிகம்

அல்லாஹ்வின் படைப்பிலேயே அழகான மூஸா (அலை)

Published On 2016-06-30 08:44 IST   |   Update On 2016-06-30 08:44:00 IST
மூஸா(அலை) அவர்களைப் பற்றி இஸ்ராயீலர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ்வே விரும்பினான்.
மூஸா (அலை), இறைவனுக்காக இஸ்ராயீலர்கள் செய்த அனைத்துக் கொடுமைகளையும் இடையூறுகளையும் சகித்து வந்தார்கள். அதில் ஒன்று இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களைப் பற்றி விதவிதமான வதந்திகளைப் பரப்பியது.

பனூ இஸ்ராயீல்கள் வெட்கமில்லாமல் ஒருவரை ஒருவர் நிர்வாணமாகப் பார்த்தவர்களாகவே குளிக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். ஆனால் மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும், தன் அங்கத்தை யாரும் பார்த்துவிடாதபடி மறைவாக, தனித்தே குளிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

மூஸா (அலை) அவர்களுக்கு மனவேதனையைத் தர விரும்பிய இஸ்ராயீலர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு சரீரத்தில் குறைபாடுள்ளது என்றும் விரை வீக்கமுடையவர் என்றும் தொழு நோய் என்றும் அதன் காரணமாகவே மூஸா (அலை) அவர்களுடன் சேர்ந்து குளிப்பதில்லை என்றும் வதந்திகளைப் பரப்பி சிரித்து மகிழ்ந்தனர்.

ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, அவர்களுடைய ஆடைகளைக் கழற்றி ஒரு கல்லின் மீது வைத்துவிட்டு மறைவான இடத்தில் நின்று குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் மீண்டும் அவர்களுடைய ஆடையை எடுக்க வரும்போது அந்தக் கல் அவர்களின் ஆடையோடு ஓடியது.

மூஸா (அலை) அவர்கள், தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முயற்சித்தார்கள். அந்தக் கல்லை தொடர்ந்தவர்களாக ‘கல்லே நில்! என்னுடைய ஆடை! என்று சப்தமிட்டவர்களாக அதை விரட்டிச் சென்றார்கள். இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்குக் கூடி இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டார்கள்.

அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் எந்தக் குறைபாடும் இல்லாத தூய்மையானவர்களாகவும் மூஸா (அலை) இருப்பதைப் பார்த்தார்கள். கல் ஓடாமல் நின்றது. உடனே, மூஸா (அலை) அவர்கள், தம் ஆடையை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை பலமுறை அடித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியைத் தான், 'இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்' என்ற திருக்குர்ஆனின் 33:69 இறைவசனம் குறிக்கிறது.

மூஸா(அலை) அவர்களைப் பற்றி இஸ்ராயீலர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ்வே விரும்பினான்.

ஸஹிஹ் புகாரி 1:5:278, 4:60:3404

- ஜெஸிலா பானு.

Similar News