ஆன்மிகம்

பொறுமையைச் சோதிக்க உருவான பயணம்

Published On 2016-06-24 09:46 IST   |   Update On 2016-06-24 09:46:00 IST
கித்ரு (அலை), மூஸா (அலை) இருவரிடையே நடந்த உரையாடல்.
இறைவன் அறிவில் சிறந்தவர் என்று குறிப்பிட்டவரை இரு கடல்களும் சேரும் இடத்தில் மூஸா (அலை) அவர்கள் சந்தித்தார்கள். அவரிடம் மூஸா (அலை) “உங்களுக்குத் தெரிந்ததை எனக்குக் கற்றுத் தருவீர்களா?” என்று மிகவும் அடக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு மற்றவர் தம்மை கித்ரு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவராக ஒரு புன்னகையோடு எதிர்கொண்டார். “நாம் சேர்ந்தே பயணிக்கலாம். ஆனால் அதற்கான பொறுமை உங்களிடம் இருக்காது” என்று கூறினார்.

அதனை உடனே மறுத்து மூஸா (அலை) “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் பொறுமையுள்ளவனாக இருப்பேன். என்ன நிகழ்ந்தாலும் பொறுமை காப்பேன்” என்றார்கள்.

அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை), மூஸா (அலை) அவர்களிடம், “கண்டிப்பாக உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது. காரணம், உங்களுக்கு முழுமையான ஞானம் இல்லாத விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாகப் பொறுமை இழப்பீர்கள். நம்மிருவருக்கும் ஒத்துவராது, கண்டிப்பாக கருத்து மோதல் ஏற்படும்” என்று கூறினார்கள்.

“இல்லை. நான் பொறுமையாக இருப்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் கருத்துக்கு ஏற்ப நடந்து கொள்வேன்” என்று மூஸா (அலை) உறுதியளித்தார்கள்.

அதற்கு கித்ரு (அலை) “அப்படியானால், நீங்கள் என்னைப் பின் தொடர்வதானால், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாகவே அதைப் பற்றி உங்களுக்கு விளக்கம் தரும்வரையில் பொறுமையாக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் அது பற்றி என்னிடம் கேட்கவே கூடாது. இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொள்வதாக இருந்தால் நீங்கள் என்னோடு பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை” என்று சொன்னார்கள்.

மூஸா (அலை) அவர்களும் அதற்கு முழு மனதாக சம்மதித்து இருவரும் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினார்கள்.

திருக்குர்ஆன் 18:66-70

- ஜெஸிலா பானு.

Similar News