ஆன்மிகம்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிகரற்றவன் இறைவன்

Published On 2016-05-25 11:13 IST   |   Update On 2016-05-25 11:13:00 IST
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இறைவனுக்கு நிகர் அவனே. இதனைப் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
மூஸா (அலை) அவர்களின் தாய், இறைவனின் கட்டளையின் பேரில் குழந்தையை பெட்டிக்குள் வைத்து நைல் நதியில் விட்டுவிடுகிறார்கள். பெட்டியைக் கண்டெடுத்த அரண்மனைக்காரர்கள் அதனை ஃபிர்அவ்னின் மனைவியிடம் சேர்ப்பித்தார்கள். அந்தக் குழந்தை அரண்மனையிலேயே வளர சம்மதத்தைப் பெற்றார் ஃபிர்அவ்னின் மனைவி.

கண்டெடுத்த குழந்தையைக் குளிக்க வைத்து, உடை மாற்றி அழகு பார்க்கும் போது, குழந்தை பசித்து அழுதது. அழுகிற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக ஊரில் உள்ள தாய்மார்கள் வரவழைக்கப்பட்டார்கள். குழந்தை செவிலித் தாய்களின் மார்பிலிருந்து பால் குடிக்க மறுத்து, வீறிட்டு அழுது கொண்டே இருந்தது.

அதைப் பார்த்துத் துடித்த ஃபிர்அவ்னின் மனைவியிடம், பெட்டியைப் பின்தொடர்ந்துவந்து, வேலையாளாகச் சேர்ந்த குழந்தை மூஸாவின் சகோதரி மர்யம் “எனக்கு ஒருவரைத் தெரியும், அவர்கள் மிகவும் அன்பாகப் பாலூட்டுவார்கள். கண்டிப்பாக இந்தக் குழந்தை அவருடைய பாலைப் பருகும்” என்று சொன்னவுடன், அந்தத் தாயை உடனே அழைத்து வரச் சொன்னார்கள்.

மகிழ்ச்சியாக வீடு திரும்பி, மர்யம் தன் தாயிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார். உடனே மூஸா (அலை) அவர்களின் தாய் அரண்மனைக்கு விரைந்து சென்றார்கள். குழந்தை அவரிடம் தரப்பட்டது. குழந்தையை அன்பாகத் தொட்டுத்தூக்கிப் பாலூட்டினார்கள். அவருடைய மடி லேசானது. அந்தத் தாயின் மனம் குளிர்ந்தது.

இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள் ஃபிர்அவ்னும் அவரது மனைவியும். அவரிடம் மட்டும் முகம் திருப்பாமல் வாய் வைத்துப் பருகியதின் காரணத்தை அந்தத் தாயிடம் வினவினார்கள்.  ஆனால் அவரோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், சாமர்த்தியமாகச் சமாளித்தார்.

பெற்ற தாயே மூஸா (அலை) அவர்களின் செவிலித்தாயாக நியமிக்கப்பட்டார். தாய்ப்பால் கொடுப்பவராக மட்டுமல்லாமல், மூஸா (அலை) வளரும் பருவத்திலும் அவர் குழந்தையைக் கவனித்து பராமரித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.

எந்தக் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்று ஃபிர்அவ்ன் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்று குவித்தானோ அந்தக் குழந்தை அவன் சொந்த வீட்டில் வளர்கிறது.

இறைவன் அந்தத் தாய்க்கு வாக்குறுதி அளித்தபடி அந்தக் குழந்தையைப் பாதுகாத்ததோடு, மிகவும் ஆடம்பரமான பாதுகாப்பான இடத்தில் சேர்த்ததோடு, சொந்தத் தாயையே பால் கொடுக்கவும் செய்துவிட்டான். அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவர் சந்தோஷப்படவும் இப்படியான ஏற்பாட்டைச் செய்துவிட்டான் இறைவன்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இறைவனுக்கு நிகர் அவனே. இதனைப் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

- ஜெஸிலா பானு.

Similar News