ஆன்மிகம்

சிறைச்சாலையில் துவங்கிய புதிய அத்தியாயம்

Published On 2016-05-07 10:18 IST   |   Update On 2016-05-07 10:18:00 IST
இறைவன் நம்மோடு எப்போதுமே இருக்கிறான். அவனிடமிருந்து நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கிறது.
இறைவன் நம்மோடு எப்போதுமே இருக்கிறான். அவனிடமிருந்து நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கிறது. யார் அவ்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் என்றும் துக்கப்படவும் மாட்டார்கள் என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.

அதன்படி இறைவனின் நல்வழிகாட்டுதலுக்கிணங்க மனசாட்சிக்குப் பயந்து இறையச்சத்தோடு யூசுப் (அலை) நடந்து கொண்டாலும், அமைச்சரின் மனைவி ஸுலேக்கா அவரை விடுவதாக இல்லை. ஸுலேக்கா, யூசுப்பிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததும், அவர் அதை மறுத்தது பற்றிய விஷயங்களும் அந்த நகரத்தில் பலவாறாகப் பரவியது. வெறும் வாய்க்கு கிடைத்த அவலாகப் பலவிதமாகப் பெண்கள் பேசிச் சிரித்தனர்.

'அமைச்சரின் மனைவி கண்டிப்பாக வழி்கேட்டில் இருக்கிறாள்' என்று பேசிக் கொண்டு திரிந்த பெண்களுக்கு ஸுலேக்கா ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். தன்னுடைய இடத்தில் வேறு பெண் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று நிரூபிப்பதே அவருடைய எண்ணமாக இருந்தது.

விருந்திற்கு வந்த ஒவ்வொரு பெண்ணிடமும் பழங்களையும் அதனை நறுக்கித் தின்பதற்காக ஒரு கத்தியையும் கொடுத்து விட்டு,  அப்பெண்கள் எதிரே நடந்து செல்லும்படி யூசுப்பை பணித்தாள். அப்பெண்கள் யூசுப்பை பார்த்ததும் அவருடைய வசீகரிக்கும் தோற்றத்தில் மயங்கி மெய் மறந்து, பழங்களுக்குப் பதிலாகத் தமது கைகளையே வெட்டிக் கொண்டனர்.

“அல்லாஹ்வே படைப்பில் சிறந்தவன், இவர் மனிதரே இல்லை, இவர் மேன்மைக்குரிய ஒரு வானவராகத்தான் இருக்க முடியும்” என்று ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்தனர். ஆனால் யூசுப் (அலை) நேர்மாறாக யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் கடந்து சென்றுவிட்டார்.

ஸுலேக்கா, மற்ற பெண்களிடம் “நீங்கள் எல்லாம் என்னை எவர் சம்பந்தமாகத் தவறாகப் பேசினீர்களோ அவர்தான் இவர். ஒருமுறை பார்த்ததற்கே கைகளை வெட்டிக் கொண்டுவிட்டீர்கள். இவரை நான் தினமும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவர் என் விருப்பத்திற்கு இணங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் சிறையில் தள்ளப்படுவார்” என்று யூசுப் (அலை) கேட்கும்படியே சொன்னாள்.

யூசுப் (அலை) அவர்களுக்கு ஸுலேக்கா பிடியில் சிக்கித் தவறிழைப்பதை விடவும் சிறைக்குச் செல்வதே மேலாகத் தோன்றியது.

அவர் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார் “என் இறைவா, இந்தப் பெண்கள் என்னைத் தவறான பாதையில் திருப்பப் பார்க்கிறார்கள். இத்தீயதைவிடச் சிறைக்கூடமே எனக்கு விருப்பமுடையதான இடமாக இருக்கிறது. இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, இவர்கள் சதித்திட்டத்தில் இருந்து என்னை மீளச்செய்வாயாக. இல்லையெனில் இவர்களுடன் சேர்ந்து அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று அழுது பிரார்த்தித்தார்கள்.

இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அப்பெண்களுடைய சதியிலிருந்து யூசுப் (அலை) அவர்களைக் காப்பாற்றினான். யூசுப் (அலை) குற்றமற்றவர் என்று தெரிந்தும், தம் வீட்டுப் பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரைச் சிறைப்படுத்தினார்கள். இது யூசுப்பின் இறையச்சத்திற்கு அநியாயமான தீர்ப்புதான், ஆனால் அதிலும் இறைவன் அவருக்கு நன்மையை வைத்திருந்தான், அது யூசுப்பின் பிராத்தனைக்குப் பதிலாக அமைந்தது.

இறைவன் நிச்சயமாக யாவற்றையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதை முழுவதுமாக நம்பினார்கள் யூசுப் (அலை). சிறைச்சாலை யூசுப் (அலை) அவர்களின் வாழ்வின் புதிய அத்தியாத்தின் தொடக்கமாகியது.

- ஜெஸிலா பானு.

Similar News