ஆன்மிகம்

இறைவன்‌ வழங்கிய அருள்வாக்கு

Published On 2016-04-28 07:16 IST   |   Update On 2016-04-28 07:16:00 IST
நபி யாகூப் (அலை) அவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபி யாகூப் (அலை) அவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனை உறுதியாக நம்பிக்கையோடு பிரார்த்தித்துக் கொண்டே இருந்ததால் அவர்களுக்கு இஸ்ஹாக் (அலை) அவர்களை மகனாகவும், யாகூப் (அலை) அவர்களைப் பேரனாகவும் இறைவன் நன்கொடையாக அளித்துள்ளான் என்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறைவனின் நன்கொடையான யாகூப் (அலை) தன் தாயின் சகோதரன் லபான் வீட்டிற்குப் போகும் வழியில் தூக்கம் வந்ததும், ஒரு கல்லை தன் தலைக்கு வைத்தபடி படுத்து உறங்குகிறார்கள்.

உறக்கத்தில் அவர் காணும் கனவில் பூமியிலிருந்து ஓர் ஏணி சொர்க்கத்திற்கு நீண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். வானவர்கள் மேலும் கீழும் இறங்குவதைக் காண்கிறார்கள். அப்போது அல்லாஹ் அவருக்கு நற்செய்தியைத் தருகிறான், “உனக்கும் உன் சந்ததியினருக்கும் அருள்கிறேன். வெகுவிரைவில் உனக்கு ஒரு பொக்கிஷத்தை அருளவிருக்கிறேன்” என்று.

மிக மகிழ்ச்சியாக உறக்கத்திலிருந்து எழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக, இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் எதனையும் வணங்கக் கூடாது, ஏழைகளுக்குத் தானம் செய்ய வேண்டும், நன்மைகள் புரிய வேண்டுமென்று உறுதியளித்துக் கொள்கிறார். இந்த இடத்தில் இறைவனுக்கு ஒரு வணக்க தலத்தை கட்டுவேன், ‘அல்லாஹ்வின் வீடு’ என்பதை இங்கு எழுப்புவேன் என்று அடையாளத்திற்காக ஒரு கல்லை அந்த இடத்தில் வைத்து சென்றதாகவும், அந்த இடத்தில்தான் பிற்காலத்தில் ‘பைத்துல் முகத்தஸ்’ நிறுவப்பட்டதாகவும் ஒரு குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

யாகூப் (அலை) தன் தாயைப் பிரிந்து, நாளை என்னாகுமென்பது தெரியாமல் தனது மாமா வீட்டிற்கு எந்தத் திட்டமிடலும் இல்லாமல் செல்ல நினைத்தபோது  இறைவனின் அருள்வாக்கு சந்தோஷத்தையும் மனநிறைவையும் அளித்தது.

- ஜெஸிலா பானு.

Similar News