ஆன்மிகம்

இறைவனின் அழகிய திருநாமங்கள்

Published On 2016-04-06 04:30 GMT   |   Update On 2016-04-06 04:30 GMT
இறைவன் ஒருவன் தான் ஆனால் அவனுக்கு 99 அழகிய பெயர்கள் உள்ளன. அதனை 'அல் அஸ்மா வுல் ஹுஸ்னா' என்கிறோம். இந்த அழகிய திருநாமங்களைக் கொண்டு அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று திருக்குர்ஆனில் உள்ளது (7:180).
"எல்லா வல்லமையும் மிக்க அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றைப் பொருளுடன் நினைவில் வைத்திருப்பவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்ற அபூஹுரைராவின் அறிவிப்பு ஸஹிஹ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்படி பெயர்களை மனனம் செய்பவர்கள் உண்மையில் சொர்க்கம் நுழைந்துவிடுவார்களா? தீமைகள் மட்டுமே செய்யும் ஒரு நபர், தொண்ணூற்று ஒன்பது பெயர்களை மனனம் செய்துவிட்டால் இறைவன் அவருடைய தீமைகளை மன்னித்துச் சொர்க்கத்தில் நுழைய செய்துவிடுவானா என்றால் 'இல்லை' என்பதே பதில்.

ஹதீஸ்களில் பல இடங்களில் 'இப்படி'ச் செய்தால் சொர்க்கத்தில் நுழைவார் என்றும், நிறைய இஸ்லாமிய பிரார்த்தனை புத்தகங்களில் இதனை 'இத்தனை' முறை ஓதினால் இறைவன் பாவங்களை மன்னித்துவிடுவான் என்றும் குறிப்பிட்டிருக்கும். அதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையே மனதை தூய்மையாக வைத்திருப்பதும், நல்ல காரியங்களைப் புரிவதும், பிறருக்கு உதவுவதும், யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருப்பதும், எல்லா நிலைகளிலும் இறைவனை நினைத்திருப்பதுமே நம்மை ஈருலகிலும் வெற்றியடையச் செய்யும்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை மனனம் செய்வதோடு சிந்தித்து, புரிந்து அவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதே சிறந்தது. பெயர்களை மனனம் செய்ய அந்தப் பெயர்களைப் பாடல்களாகக் கவிதைகளாகக் கோர்த்து வாயில் முணுமுணுத்தாலே மனதில் பதிந்துவிடும். சில பெயர்களும், அதன் பொருள்களும்:

1. அர்-ரஹ்மான்: அளவற்றஅருளாளன், 2. அர்-ரஹீம்: நிகரற்ற அன்புடையோன், 3. அல்-மலிக்கு: உண்மையான அரசன், 4. அல்-குத்தூஸ்: தூய்மையாளன், 5. அஸ்-ஸலாமு: சாந்தி அளிப்பவன், 6. அல்-முஉமின்: அபயமளிப்பவன், 7. அல்-முஹைமின்: பாதுகாவலன்.

அதுமட்டுமின்றி, 'யார் அல்லாஹ்வை அழகிய முறையில் நினைவு கூறுகிறார்களோ அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!' என்றும் திருக்குர்ஆன் 13:28-ல் வந்துள்ளது.

- ஜெஸிலா பானு. 

Similar News