ஆன்மிகம்

வழிபாட்டிற்குரியவன் ஒருவனே

Published On 2016-04-04 12:47 IST   |   Update On 2016-04-05 12:14:00 IST
குர் ஆனில் பல வசனங்களில் இறைவன் நேரடியாகப் பொருள் தராமல் ஒரு விஷயத்தை உறுதியாகத் தெரிவிக்க அதனை மறுத்து பின்பு உறுதிப்படுத்துகிறான்.
இஸ்லாமியர்களின் முதல் கலிமாவான `லா இலாஹ இல் லல்லாஹ்` என்பதின் பொருளை கூர்ந்து கவனித்தால் `வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை` என்பதாகும்.

`லா இலாஹ` அதாவது வழிபாட்டிற்குரியவன் யாருமில்லை என்று கூறும் போதே வழிபாட்டிற்குரிய தகுதி யாருக்கும் எவருக்கும் இல்லை என்று முதலில் மறுத்துச் சொல்லிவிட்டு, பின்பு `இல் லல்லாஹ்` - அல்லாஹ்வைத் தவிர என்று அதனை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறான். இதிலிருந்து தகுதி அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது, அவனுக்கு இணையாக யாரும் எதுவும் இல்லை என உறுதிப்படுத்துவதே இஸ்லாமின் அஸ்திவாரமாகும்.

இந்தக் கலிமாவை மனதார மொழிந்தவர்களுக்கு நரகம் தடுக்கப்பட்டதாகிவிடுகிறது.

``யார் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் `லா இலாஹ இல் லல்லாஹ்` என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்`` என்று ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

இதுவே இறைத்தூதர்களின் இஸ்லாமிய அழைப்பிற்கான திறவுகோலாக இருந்தது.

வெறும் வாய் வார்த்தையாக மொழிவதல்லாமல் பொருள் உணர்ந்து, உறுதியாகத் தெளிந்த உள்ளத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இதைக் கூற வேண்டும்.

-ஜெஸிலா பானு.

Similar News