ஆன்மிகம்

இறைவன் தந்த திருமறை

Published On 2016-04-01 11:52 IST   |   Update On 2016-04-01 12:00:00 IST
நபிகளார் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட 'நம் நாயகம்' நூலில் இருந்து சில வரிகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது ஆவதற்கு மூணு வருடங்கள் இருந்துச்சு.

அப்ப நாயகத்திற்குத் தூக்கத்தில, இறைச்செய்தி நல்ல கனவுகளா வந்திருக்கு. அதிகாலைப் பொழுதோட விடியலைப் போல அந்தக் கனவெல்லாம் தெள்ளத் தெளிவா இருந்துச்சாம். அந்தக் கனவுகளுக்கு விளக்கம் புரியாம நாயகம் (ஸல்) தனிமையை விரும்பியிருக்காங்க. தண்ணீரையும், சத்து மாவையும் எடுத்துக்கிட்டு, மக்காவிலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கிற நூர் மலைக்குப் போயி, அங்குள்ள ஹிரா குகையில தங்கி இந்தப் புவிய இயக்குற சக்திய பற்றிய நினைப்பாவே இருப்பாங்களாம்.

தமக்குத் தெரிஞ்ச வணக்க வழிபாடுகளைச் செஞ்சு, இந்தப் பூமியைத் தாண்டி, இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குற அபார சக்தியைப் பற்றியும், மறைபொருளைப் பற்றியும் ஆழமாய்ச் சிந்திக்கறதுலேயுமே ஈடுபடுவாங்களாம். ஒவ்வொரு ரமதான் மாதத்திலும் அந்த இடத்துலேயே இருப்பாங்களாம்.

அப்போதான் அந்தச் சம்பவம் நடந்தது…

நாயகத்துக்கு நாற்பது வயது முடிவடையுது. வழக்கம் போல ரமதான் மாதத்திலே, மனைவி கதீஜாவிடம் சொல்லிட்டு ஹிரா குகைக்குப் போறாங்க. இறைவனைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்போது அவர்களின் முன்னால் ஒரு வானவர் தோன்றி இருக்காங்க.

நாயகத்தைப் பார்த்துச் சொல்லி இருக்காங்க “ஓதுங்க"ன்னு.

அப்ப நாயகம் (ஸல்) சொல்லி இருக்காங்க “எனக்கு ஓத எல்லாம் தெரியாதே"ன்னு. உடனே அந்த வானவர் என்ன பண்ணி இருக்காங்க, நாயகத்தைக் கட்டிப் பிடிச்சு அணைச்சிருக்காங்க.

அணைச்சுட்டு, “இப்ப ஓதுங்க"ன்னு சொல்லி இருக்காங்க.

அதுக்கு நாயகம் (ஸல்) திரும்பவும் சொல்லி இருக்காங்க “எனக்கு ஓதத் தெரியாதுங்களே!"ன்னு.

இரண்டாவது முறையும் முன்ன செஞ்சது மாதிரியே சிரமம் தர்ற அளவுக்கு அந்த வானவர், நாயகத்தை இறுகக் கட்டி அணைச்சிருக்காங்க. திரும்பவும் சொல்லி இருக்காங்க “இப்ப ஓதுங்க"ன்னு.

மறுபடியும் நாயகம் (ஸல்) சொல்லி இருக்காங்க “எனக்கு ஓதத் தெரியாதுங்க"ன்னு.

மீண்டும் அந்த வானவர் ஜிப்ரீல் (அலை) மூன்றாவது முறையா நாயகத்தை இறுக்கமாகக் கட்டி அணைச்சுட்டு, அல்லாஹ்கிட்ட இருந்து வந்த வசனத்தை, செய்தியைச் சொல்றாங்க.

“நபியே! எல்லாவற்றையும் படைச்ச இறைவனோட திருப்பெயரால் திருக்குர்ஆனை நீங்க ஓதுங்க. இறைவன்தான் மனிதனைக் கருவிலே இருந்து படைச்சான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் கண்ணியமிக்கவன்"ன்னு சொல்லி திருக்குர்ஆனில் வர்ற 'சூரத்துல் அலக்' அப்படிங்கற வசனத்தை ஓதிக் காட்டினாங்க.

‘அலக்’னா கருவுற்ற சினைமுட்டைன்னு அர்த்தம். ஏன்னா அதுல இருந்துதான் உயிர் உண்டாகுதுங்கறதால அந்த அத்தியாயத்திற்கு அந்தப் பெயர் வந்தது. நாயகமும் அவங்க சொன்னபடியே ஓதுறாங்க. அவங்களால ஓத முடியுது… அவங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு.

நாயகம் (ஸல்) வேகமாக வீட்டிற்கு வந்து தம் மனைவி கதீஜாவிடம் நடந்ததைச் சொல்லி “எனக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு பயம்மா இருக்கு"ன்னு சொல்றாங்க. அதை எல்லாம் கவனமாகக் கேட்ட கதீஜா (ரலி) சொல்றாங்க “இறைவன் உங்களை இழிவுபடுத்த மாட்டான். ஏன்னா நீங்க உறவினர்களோட இணங்கி வாழக் கூடியவங்க. கஷ்டப்படுறவங்களோட கஷ்டத்தை எல்லாம் உங்க கஷ்டமா நெனச்சு அதை நீங்க தாங்கக் கூடியவங்க. நீங்க உழைச்சு ஏழைகளுக்குக் கொடுக்குறீங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளை நீங்க உபசரிக்கக் கூடியவங்க. சோதனை வர்றவங்களுக்கு நீங்களா தேடிப்போயி உதவி செய்யக் கூடியவங்க. அப்படிப்பட்ட உங்களை எப்பவுமே இறைவன் இழிவுபடுத்த மாட்டான்"னு. அப்புறம் கதீஜா (ரலி), அவர்கள் தந்தையுடன் பிறந்த நவ்ஃபல் அப்படிங்கறவருடைய மகன் வராக்கா கிட்ட அழைச்சிட்டுப் போறாங்க.

வராக்கா அந்தக் காலத்திலேயே ரொம்பப் படிச்சவரு. கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவி இருந்தவரு. அவரு ஹீப்ரு மொழியிலே பைபிளை எழுதக் கூடிய அளவுக்கு ஆற்றல் நிறைந்தவரு. கண்பார்வை இல்லாதவரு, ரொம்பவும் வயதானவரு.
ஹிரா குகையில் நடந்ததையெல்லாம் நாயகம் (ஸல்) வராக்கா கிட்ட சொல்றாங்க. அதை அவர் ரொம்பவும் கூர்மையாகக் கேட்டுட்டு, சொல்றாங்க “கண்டிப்பா நீங்க சந்திச்சது அதே வானவர்தான்… மூஸாவிடம் இறைவன் அனுப்பிய வானவர்” அப்படின்னு சொல்லிட்டு “உங்களுடைய சமூகத்தார் உங்கள நாட்டை விட்டு வெளியேற்றும்போது நான் உயிரோட இருப்பேனா இல்லையான்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் உயிரோடு இருந்தேன்னா அப்ப உங்களுக்கு நான் உதவி செய்வேன்"ன்னு சொல்றாங்க.

உடனே நாயகம் (ஸல்) “என்ன? என்னை இந்த நாட்டை விட்டு அனுப்பிச்சிருவாங்களா?"ன்னு கேட்கிறாங்க

அதுக்கு வராக்கா சொல்றாங்க “ஆமா… சத்திய வார்த்தையக் கொண்டு வந்த எந்த மனிதரையும் இறைத்தூதர்களையும் மக்கள் பகைச்சிக்காம இருந்ததில்ல"ன்னு. ஆனா நாயகத்தை மக்காவாசிகள் துரத்தியபோது நாயகத்துக்கு உதவி செய்ய வழியில்லாமல் அதுக்கு முன்னாடியே வராக்கா இறந்திடுறாங்க.

இறைவனிடம் இருந்து இரண்டாவது செய்தி நாயகத்துக்கு வருது. அப்ப இதே மாதிரி ஹிரா குகையில இருந்து நாயகம் (ஸல்) வெளியே நடந்து வரும்போது, நாயகத்தை யாரோ கூப்பிட்ட சப்தம் கேட்குது.

திரும்பித் திரும்பிப் பார்க்குறாங்க. யாருமே இல்லை. தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்குறாங்க.

வானத்துக்கும் பூமிக்கும் நடுவிலே ஒரு பெரிய நாற்காலி போட்டு, பிரமாண்டமான உருவத்திலே ஜிப்ரீல் (அலை) இருக்காங்க. ஹிரா குகையிலே பார்த்த அதே வானவர்தான். ஆனா இவ்வளவு பிரமாண்டமா பார்த்துட்டு, நாயகம் (ஸல்) மயக்கம் போட்டு தரையிலே விழுந்துடுறாங்க. அப்புறம் தானாகவே மயக்கம் தெளிஞ்சு, வேக வேகமாகப் போறாங்க.

வீட்டுக்குள் நுழைஞ்சதுமே நாயகம் (ஸல்) மனைவி கதீஜாவைப் பார்த்து, “என்னைப் போர்த்துங்க… என்னைப் போர்த்துங்க"ன்னு நடுக்கத்துடன் சொல்றாங்க. கதீஜா (ரலி) அவர்களும் நாயகம் (ஸல்) சொன்னபடி போர்த்தி விடுறாங்க. அப்ப ஜிப்ரீல் (அலை) வந்து அல்லாஹ்வுடைய வசனத்தைச் சொல்றாங்க.

அந்த வசனம் என்ன சொல்லுதுன்னா “போர்த்திக் கொண்டு இருப்பவரே, எழுந்திருங்க! நீங்கதான் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யணும். உங்களுடைய இறைவனைப் பெருமைப் படுத்துங்க. உங்களுடைய ஆடையைப் பரிசுத்தமாக்கி வெச்சுக்குங்க. அசுத்தங்களை வெறுத்துடுங்க. உங்க இறைவன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகக் கஷ்டங்களை நீங்க பொறுத்துக்குங்க" அப்படின்னு திருக்குர்ஆன்ல வர்ற 'சூரத்துல் முத்தஸ்ஸீர்'ல உள்ள வசனத்தைச் சொல்றாங்க. 'முத்தஸ்ஸீர்'னா ‘போர்த்திக் கொண்டிருப்பவர்’ன்னு அர்த்தம்.

இந்த மாதிரி ஒவ்வொரு வசனமா நாயகத்திற்கு இறக்கப்பட்டு மொத்தம் 114 அத்தியாயங்கள் (சூரா) நமக்குக் கிடைச்சிருக்கு. முதல்ல இறங்கின சூரத்துல் அலக்கில் உள்ள வசனத்தில் உயிர் உண்டாகுதுங்கறதப் பத்தி 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் மூலமா நமக்கு இறைவன் சொல்லியிருக்கான்!

இன்றைய காலகட்டத்துல அறிவியல் பூர்வமா நிறைய விஷயங்களை நாம தெரிஞ்சிக்கிறோம். ஆனா 1400 வருடங்களுக்கு முன்பே பலநூறு அறிவியல் செய்திகளை நாம திருக்குர்ஆன்ல பார்க்க முடியுது.

இறைவன் நமக்குத் திருக்குர்ஆன் என்ற இறைநெறியைக் கொடுத்து, அதுல தந்திருக்கிற கட்டளைப்படி நம்மால் வாழ முடியுமான்னு நமக்குச் சந்தேகம் வரக் கூடாதுன்னு… அப்படி வாழ முடியும்ன்னு வாழ்ந்து காட்டிய, நமக்கெல்லாம் முன்மாதிரியா இருந்த நாயகத்தையும் அனுப்பி வைச்சான். ஒவ்வொரு வசனமும் இறைவன் நமக்காக, நம்மை வழி நடத்தறதுக்காகக் கொடுத்திருக்கான்.

அந்தத் திருக்குர்ஆன்ல வர்ற ஒவ்வொரு வசனத்தையும் புரிஞ்சு, இறைவன் நமக்காகக் கொடுத்த விஷயம்னு தெரிஞ்சு நாம திருக்குர்ஆனை ஓதிப் பயனடையணும்.

எழுதுபவர் ஜெஸிலா பானு

Similar News