தோஷ பரிகாரங்கள்

எந்த ஜாதகக்காரருக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும்...

Update: 2022-08-04 08:32 GMT
  • படிப்பில் சாதிக்க கல்விகாரகன், புத்திக்காரகன், புதன் பகவானின் அனுகிரகம் மிக அவசியம்.
  • குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது.

கல்விச் செல்வமே, ஒருவருக்கு மிகச் சிறந்த செல்வம் என்பதில் மாற்று கருத்து இல்லை. சில குழந்தைகளுடைய பெற்றோர்கள் நல்ல கல்வி பயின்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் பெற்றோருக்கு எதிர்மறையாக இருப்பார்கள். சில பெற்றோர்களுக்கு அடிப்படை கல்வி ஞானம் கூட இருக்காது. ஆனால் பிள்ளைகள் படிப்பில் படு சுட்டியாக, கெட்டியாக இருப்பார்கள்.

குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது. அதே போல் எந்த படிப்பு அறிவும் இல்லாத பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்தில் படித்தவர்களுக்கு கூட முழுமையாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது. அரசாங்க பள்ளியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத பலர் இலக்கணப் பிழை இல்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள், பேசுவார்கள். இது போன்ற அனைத்திற்கும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள புத ஆதித்ய யோகம் மட்டுமே காரணம்.

எந்த ஜாதகமாக இருந்தாலும் படிப்பில் சாதிக்க கல்விகாரகன், புத்திக்காரகன், புதன் பகவானின் அனுகிரகம் மிக அவசியம். புதன் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே படித்ததை புத்தியில் நிறுத்தி தேவைப்படும் நேரத்தில் சரியாக பயன்படுத்த முடியும். அத்துடன் சுய ஜாதக ரீதியாக 5-ம் பாவகம் எனும் புத்திஸ்தானமும் மனோகாரகன் மற்றும் உடல் காரகனாகிய சந்திரன் மற்றும் ஒழுக்கத்துடன் கல்வியைப் போதித்து, படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் கிரகம் குரு வலுப்பெற வேண்டும்.

ஜாதகத்தில் லக்னம் கேந்திரம் மற்றும் திரிகோணம் வலிமை பெற்றவர்கள் படித்து பட்டங்களும் பதக்கங்களுமாக குவிப்பார்கள். கல்விக்கான காரக கிரகம் புதன் தன்னுடைய பயண பாதையில் சுப கிரகங்களை தொடும்போது சிறப்பான கல்வியை கற்க முடியும். அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் இவற்றை தொடும்போது கல்வியில் தடையும் கொடுக்கிறது. சில குழந்தைகள் இளம் வயதில் சரியாக படிக்காமல் மத்திம வயதில் சிறப்பாக படித்து நல்ல மார்க் எடுப்பார்கள். மத்திம வயதில் இயங்கும் தசா புத்திகள் கிரகம் சுபவலிமை பெற்றதாக இருக்கும். சில குழந்தைகள் இளம் வயதில் நன்றாக படித்து மத்திம வயதில் கவனக் குறைவு அடைவார்கள்.

இத்தகையவர்களுக்கு 2-ம் பாவகம் சுபவலிமையாகவும் 4-ம் பாவகம் வலிமை குன்றியும் இருக்கும். ஒருவரின் கல்வியை தீர்மானம் செய்வதில் புதன் 4,5 பாவகத்தின் பங்கு மிக முக்கியமானது. ஜனன ஜாதகத்தில் புதன், ராகு அல்லது புதன், சனி இணைவு, சம்பந்தம் இருந்தாலோ சிறு வயதிலேயே ராகு தசை, சுக்கிர தசை நடந்தாலோ படிப்பில் மந்த தன்மையை உருவாக்கும்.

4, 5-ம் பாவக அதிபதி அல்லது 4,5-ம் பாவகத்தில் நீச, அஸ்தமன , வக்கிர கிரகங்கள் இருந்தாலோ இளம் பருவத்திலேயே படிப்பில் தடை ஏற்படும்.அசுப கிரகங்களை தொடும் போது அந்த காரகத்துவ சம்பந்தப்பட்ட படிப்பை தேர்ந்து எடுத்துப் படிக்கும் போது தடையை தருவதில்லை. உதாரணமாக புதன் கேதுவை தொட்டால் கேதுவின் காரகத்துவம் தொடர்பான ஜோதிடம், ஆன்மீகம் சட்டம் தொடர்பான படிப்பை எடுத்துப் படிக்கும் போது அந்த படிப்பில் தடை ஏற்படாது. அதாவது ஜாதகத்தின் குறையை தனக்கு சாதகமாக மாற்ற முயலும் போது ஜாதகர் அடையும் வெற்றி அளப்பரியது.

புதன் ஒரு ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்து, குரு பார்வையில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நன்றாக படிக்க முடியும்.

புதன், சனியின் தொடர்பை பெற்றால் படிக்கும் ஆர்வத்தை குறைக்கும். பகை கிரகமான செவ்வாயுடன் புதன் இணைந்து, சனியின் பார்வையைப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும். ஜாதகத்தில் புதன் ஓரளவு வலுவான அமைப்பில் இருந்து சந்திரன் மற்றும் ஐந்தாம் பாவக அதிபதி, வலு குறைந்த நிலையில் இருக்கும்பொழுது , படித்தவுடன் மறந்து விடும் அல்லது அவர்களது படிப்பு மிகவும் பின் தங்கியே இருக்கும். இது கற்ற கல்வியை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத அமைப்பாகும். மேலும் படிக்கும் வயதில் சுபயோக தசாபுத்திகள் இல்லாவிட்டாலும் கல்வி தடைபடும் அல்லது படிப்பு வாசனையே இல்லாமல் போய்விடும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் பொது தேர்வு நடந்து முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் எந்த படிப்பை தேர்வு செய்வது என்ற குழப்பம் பெற்றோர்களையும் மாணவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை எந்த வகையான படிப்பு படித்து பிற்காலத்தில் எந்த துறையில் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

என் குழந்தை என்ன படிப்பான்? டாக்டரா? என்ஜினீயரா? ஆடிட்டரா? ஐ.ஏ.எஸ்? ஐ.பி.எஸ் ஆ? அரசு அதிகாரியா? போன்ற பல்வேறு கனவுகளை பெற்றோர்கள் சுமந்து வருகிறார்கள். அத்துடன் எந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற மனக் குழப்பமும் நிறைந்து இருக்கிறது. சில பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்ப கல்வியை தேர்வு செய்து படிக்க உதவுகிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் தங்கள் படிக்க நினைத்து நிறைவேறாத ஆசையை தாங்கள் பிள்ளைகளிடம் புகுத்தி படிக்க வைக்க விரும்புகிறார்கள்.

குழந்தைகளின் விருப்பமோ, பெற்றோர்களின் விருப்பமோ கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்கும் நிலையில் அவர்களின் ஜனன ஜாதகத்தில் ஜீவனத்தை குறிப்பிடும் 10-ம் பாவகத்தை முதன்மை படுத்தி கல்வியை தேர்வு செய்வது சிறப்பு. ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும்.

இல்லாவிடில் அவன் கற்ற கல்வியால் பயன் இல்லாமல் போய்விடும்.10ம் வகுப்பில் தேர்ச்சியான மாணவர்கள் தேர்வு செய்யும் பாடத்திட்டம் கல்லூரி படிப்பு முடியும் வரை மாணவர் எந்த துறைசார்ந்த கல்வியில் தன்னை ஈடுபடுத்தப் போகிறார் என்பதை தெரிவிக்கும். +2 முடித்து கல்லூரிக்குள் நுழைய இருக்கும் மாணவர்கள் தேர்வு செய்யும் பட்டப்படிப்பு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஜீவனத்தை பெற்றுத் தரக்கூடிய வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய இருப்பது அவசியம்.

ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதியின் நிலையை கொண்டும், பத்தாம் இடத்தில் உள்ள கிரகத்தின் நிலையை பொருத்தும், ஆறாம் இடத்தின் வலுவிற்கும் ஏற்ற தொழில் கல்வியை தேர்வு செய்வது சிறப்பு கல்வியில் தடை இருப்பவர்கள் தினசரி விநாயகரையும், சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வந்தால் கல்வியில் உண்டாகும் தடங்கல்கள் கண்டிப்பாக நீங்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News