தோஷ பரிகாரங்கள்
முடிச்சூர் வித்யாம்பிகை

விரைவாக விவாகமருளும் வித்யாம்பிகை- முடிச்சூர்

Published On 2022-05-28 06:02 GMT   |   Update On 2022-05-28 06:02 GMT
வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூட இங்கு பரிகாரம் செய்தால் விரைவில் நிறைவேறும்.
தலைநகர் சென்னைக்கு அருகில் சாஸ்திர நூல்கள் ‘நகரேஷீ காஞ்சி’ எனச் சிறப்பித்துக் கூறுகின்ற காஞ்சி மாநகருக்குச் செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம்தான் முடிச்சூர். ஆதியில் மணமுடிச்ச நல்லூர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள இவ்வூரில் ஈசனும் இறைவியும் திருமணக் கோலத்தில் காட்சி தந்தமையால் அப்பெயர் விளங்கியது. நாளடைவில் முடிச்சூர் என்று மருவியது. மேலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை ஸ்ரீஅப்பாரியார் சுவாமிகள் என்ற மகான் ஓலைச் சுவடிகளிலிருந்து எடுத்து அச்சில் கோர்த்து இவ்வூரில் இருந்து முடித்தமையால் முடிச்சூர் என்ற பெயரைப் பெற்றது என்பர்.

நல்லோர் பலர் நாவின் மூலம் நனி சிறந்த வார்த்தைகளின் படியும் முன்னோர்களின் சான்றின் படியும், தொல் பொருள் ஆய்வாளர்களின் பார்வையின்படியும் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுக்கு முற்பட்ட தென்றும், இதுவே பல்லவர் காலக் கட்டடக் கலைக்குச் சான்று பகரும் ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.ஸ்ரீஎன்றால் லட்சுமி, வித்யா என்றால் சரஸ்வதி. இந்த இரண்டு ஸ்வரூபமும் சேர்ந்து அருள்காட்சி புரிபவள்தான் ஸ்ரீவித்யாம்பிகை.

அபய வரத ஹஸ்தம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறாள். இந்த வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூடவும், தோஷம் நீங்கவும் இங்குள்ள நாகர் மேடையை வலம் வந்து அன்னையின் சந்நதியில் ஒரு விரலி மஞ்சளைக் கயிற்றில் கட்டி விட்டு வழிபாடுகள் நடத்தி விட்டுச் சென்றால் உடனே நல்ல இடத்தில் அப்பெண் வாழ்க்கைப் படுகிறாள் என்பது ஐதீகம். அத்தோடு அனுபவித்தவர்களும் எடுத்துச் சொல்கிறார்கள். விரைவில் விவாகம் நடைபெற வரம் அருளும் இந்த வித்யாம்பிகையை திருமணமாகாத ஆண்களும் பெண்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.
Tags:    

Similar News