ஆன்மிகம்
கல்வாழைக்கு பரிகாரம் செய்வதற்காக கோவில் கொடிமரம் முன் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்த பக்தர்களை படத்தில் காணலாம

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள்

Published On 2021-07-26 09:01 GMT   |   Update On 2021-07-26 09:01 GMT
பக்தர்கள் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் கொடிமரம் முன்பு அமர்ந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனுக்கு பூஜைகள் செய்தும் பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனிசன்னதி உள்ளது. மேலும், திருமணமாகாதவர்களுக்கு இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதன் காரணமாக இக்கோவிலுக்கு ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் பரிகாரம் செய்வதற்கும் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காகவும் எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

ஊரடங்கு காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், பலர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யமுடியாமல் தவித்தனா். தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாதங்களுக்குப் பின்னர் கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கிடைத்த தகவலால் நேற்று திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் காலையிலேயே வரத்தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் கோவில் கொடிமரம் முன்பு அமர்ந்து கல்வாழைக்கு பரிகாரம் செய்தும், எமனுக்கு பூஜைகள் செய்தும் பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வரும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்களைக் காக்கும் வகையில் அரசாங்கம், வெளியில் பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து தான் செல்ல வேண்டும், கைகளில் சானிடைசர் தெளித்துக் கொள்ளவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தி வருகிறது.

இந்திநலையில் நேற்று கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முககவசம் அணியாமலேயே வந்ததைக் காண முடிந்தது. கோவிலில் பரிகாரம் செய்வதற்கு அனுமதி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் பணியாளர்களுக்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தாதது ஏன் என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் குமுறலோடு வேதனையை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News