ஆன்மிகம்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்

திருமணத்தடை நீக்கும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்

Published On 2021-07-16 04:17 GMT   |   Update On 2021-07-16 04:17 GMT
இத்தல தீர்த்தத்தில் ஞாயிறுதோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவேற்காடு தலத்தில் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்று விளங்குகிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்து அம்பிகையையும், திருவலிதாயம் பாலாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும், ஒரே நாளில் சென்று வழிபடுவோர் , இம்மை மறுமை நலன்களைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.

சிவன் ஒரு முறை பார்வதியிடம், “இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர்” என்று கூறியுள்ளார். பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லைவரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு “விடந்தீண்டாப்பதி” என்ற பெயரும் உண்டு.

மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் மிகக் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறுதோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
Tags:    

Similar News