ஆன்மிகம்
சித்திரகுப்தர்

கேது தோஷத்திலிருந்து நிவர்த்தி தரும் நயினார்கோவில் சித்திரகுப்தர்

Published On 2020-01-28 05:21 GMT   |   Update On 2020-01-28 05:21 GMT
ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம்.
சித்திரகுப்தருக்கு இந்தியாவில் 11 இடங்களில் தனிக்கோவில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் அனைவரும் அறிந்ததுதான். இது தவிர திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்திலும் சிறிய கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. இவ்வாலயத்தை ‘நயினார்கோவில்’ என்று இப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

நவக்கிரகங்களுள் கேதுவுக்கு அதிபதியாகவும் சித்திரகுப்தர் விளங்குகிறார். ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல் உபாதை, நிம்மதியின்மை, சொத்துத் தகராறு போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம்.

சித்திரகுப்தர் அவதரித்த நாளில், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கனிகள், தானியங்கள், பழங்கள், கிழங்குகளை சித்திரபுத்திர நயினாருக்குப் படைத்து மகிழ்கின்றனர். இனிப்புப் பலகாரங்கள், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஒரு வாரம் விரதமிருந்து, மூன்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரண்டு மல்லிகைப்பூ மாலை அல்லது ரோஜாப்பூ மாலை அணிவித்து, தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்து, நான்காவது வாரம் பொங்கலிட்டு வழிபட பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ தொலைவில், தென்காசி செல்லும் மெயின் ரோட்டிலுள்ள சிறு நகரம் ஆலங்குளம். இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது நல்லூர் கிராமம். இங்கு வைத்திலிங்க சுவாமி கோவில் முன்புள்ள நயினார் தெருவில் சித்திரகுப்தர் கோவில் இருக்கிறது. ஆலங்குளத்தில் இருந்து பேருந்து, சிற்றுந்து வசதிகள் உள்ளன.
Tags:    

Similar News