ஆன்மிகம்
தீர்த்தவாரி

முற்பிறவி பாவம் போக்கும் தீர்த்தவாரி

Published On 2020-01-01 08:11 GMT   |   Update On 2020-01-01 08:11 GMT
நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள், பெற்ற சாபங்கள் அனைத்தும், தீர்த்தவாரியில் கலந்துகொண்டு நீராடுவதன் மூலம் தீரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
ஒரு தாயின் வயிற்றில் மனிதன் கருவாக உருவாகும் போதே, அவனுடைய தாய்- தந்தையர்களிடம் இருந்தும், பல பிறவிகளில் ஆத்மாவின் பாவ- புண்ணியங்களும் இந்தப் பிறவியில் வேலை செய்யத் தொடங்கி விடும். அவரவர் செய்துவந்த பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப, நன்மை- தீமைகளை மனிதன் அனுபவிக்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ளும் இன்ப- துன்பங்கள், பிரிவினைகள், விபத்துக்கள் அனைத்திற்குமே முற்பிறவி கர்மாவே காரணம். அத்தகைய கர்மவினையைப் போக்க, பூஜை மற்றும் வழிபாடுகளால் முடியும் என்பது காலம், காலமாக ஆன்மிக சான்றோர்களால் சொல்லப்பட்டு, நம்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிகாரங்கள், வழிபாடுகளால் ஒரு சிலருக்கு உடனடியாக பலன் கிடைக்கின்றன. ஒரு சிலருக்கு பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை.

நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள், பெற்ற சாபங்கள் அனைத்தும், தீர்த்தவாரியில் கலந்துகொண்டு நீராடுவதன் மூலம் தீரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பக்தவச்சலப் பெருமாள் என்று அழைக்கப்படும் வியதபாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் மண்டபத்தில் மகாபாரதம் அருளிய வியாசர் வாழ்ந்து வருவதாக ஐதீகம். ஒருவரின் ஆன்மா சாந்தியடைய, முற்பிறவி பாவங்கள் தீர, வியாச முனிவர் குறிப்பிட்ட 12 திருத்தலங்களில் இந்த தலம் முதன்மையானதாகும்.

இந்த திருத்தலம் முற்பிறவி சாபங்கள், பாவங்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வியதீபாத நித்ய யோக நாளில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு திருக்கோவிலில் இருந்து பெருமாள், பக்தர்கள் புடைசூழ புறப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி காண்கிறார். மிகவும் கோலாகலமாக நடக்கும் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளுடன் நீராடுகின்றனர்.

இந்த தீர்த்தவாரியின் போது, தாமிரபரணி ஆற்றில் நீராடுவதன் மூலம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், நம் குடும்பத்தில் மறைந்த ஆன்மாக்கள் சாந்தி அடைவதாகவும், பிறவியில்லாத நிம்மதி கிடைக்கும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.

இத்தகைய அற்புதம் வாய்ந்த தீர்த்தவாரி, பக்தவச்சலப் பெருமாள் ஆலயத்தில் 1.1.2020 நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந்தத் தலத்தில் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது, வடமாநிலங்களில் உள்ள புண்ணிய நதிகளில் மேற்கொள்ளப்படும் தர்ப்பணத்திற்கு இணையானதாக சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News