ஆன்மிகம்

நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் திருமண பரிகாரம் செய்யும் முறை

Published On 2018-07-03 04:34 GMT   |   Update On 2018-07-03 04:34 GMT
நித்திய கல்யாணப்பெருமாள் கோவில் காரியத் தடை, திருமணத் தடைகளை உடனே உடைத்தெறியும் திருத்தலமாக விளங்குகிறது. இங்கு திருமண பரிகாரம் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
பல்லவ மன்னன் ஒருவன் இத்தலத்தின் மேன்மையை அறிந்து, தினமும் ஒரு பெண்ணுக்கு இங்கு திருமணம் செய்துவைத்தான். ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகு நேரமாகியும் மணமகன் அமையவில்லை. காத்திருந்து காத்திருந்து மனம் நொந்துபோனான். வராகரை வேண்டி அழுதான். அப்போது பேரழகு பொருந்திய மணமகன் வந்து அப்பெண்ணை மணம் செய்து கொண்டு, ‘மன்னா! எம்மைப்பார்’ என்று கூறி வராகராக திருக்காட்சிதந்து கருவறைக்குள் சென்று மறைந்தார். பின்னர் அம்மன்னன் ஆலய திருப்பணிகள் பல செய்தானாம்.

திருமணமாகாத ஆண், பெண் யாரானாலும் திருவிடந்தைக்கு சென்று, அங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி, இரண்டு மாலைகளை வாங்கிச்சென்று பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவற்றுள் ஒரு மாலையைப் பெற்று ஒன்பது முறை ஆலயவலம் வந்து, கொடிமரத்தில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அம்மாலையுடன் வந்து தினமும் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் கூடிவரும்.

திருமணம் ஆன பிறகு தம்பதியர்கள் தங்கள் துணைகளுடன் மீண்டும் இங்கு வந்து பெருமாளுக்கு மாலை சமர்ப்பித்து, ஆலயத்தினை மூன்று முறை வலம்வந்து வணங்கிச் செல்லவேண்டும். வீட்டினில் வைத்து வழிபட்டு வந்த பழைய மாலையினை தங்கள் துணைகளுடன் இங்கு வரும்போது எடுத்துவந்து ஆலய தலமரமான புன்னை மரத்தினடியில் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.

இத்தலம் சகல நாக தோஷங்களுக்கும், பிற கிரக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் திருத்தலமாகவும் உள்ளது. இங்கு ஆதிவராகமூர்த்தியின் கருவறையில் பசுநெய் சேர்த்து வழிபடுவது, பற்பல கிரக தோஷங்களை அகற்றும் என்கிறார்கள். திருவிடந்தை வராக மூர்த்திதான் திருமலை திருப்பதியிலும் அருள்கிறார் என்கிறார் திருமங்கையாழ்வார்.

சென்னை திருவான்மியூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குக்கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம்- புதுச்சேரி செல்லும் வழியில் கோவளத்திற்கு அடுத்து திருவிடந்தை அமைந்துள்ளது. 
Tags:    

Similar News