ஆன்மிகம்
மறைசாட்சி தேவசகாயம் சொரூபம்

தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வாடிகனில் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வழங்கப்படுகிறது

Published On 2021-11-10 09:07 IST   |   Update On 2021-11-12 20:43:00 IST
குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் 23-4-1712-ம் ஆண்டு வாசுதேவன்- தேவகியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நீலகண்டபிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்றார். 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறை மாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அதன் முதல் படியாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2-12-2012-ம் அன்று அறிவிக்கப்பட்டது.

அன்றைய தினம் இதற்கான விழா நாகர்கோவில் கார்மல் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இந்தியாவின் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 21-2-2020 அன்று தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம், அதற்கு தடை ஏதும் இல்லை என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 3-5-2021 அன்று வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில்தான் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடிதத்தை நேற்று புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே, தேவசகாயம் புனிதர் பட்ட திருப்பணிக்குழு வேண்டுகையாளர் அருட்பணியாளர் டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.

அவர் அந்த உத்தரவு கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளரும், கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான தேதி இன்று (அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதத்தை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முக்திப்பேறுபெற்ற தேவசகாயம் என்னும் லாசருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வருகிற 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மேலும் 5 பேருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. புனிதர் பட்டங்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குவார். இந்த விழாவில் நமது நாட்டில் இருந்து ஏராளமானோர் வாடிகனுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தின் முதல் புனிதர்தேவசகாயம்

அடுத்த ஆண்டு ( 2022) முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் திருமணமான பொதுநிலையினரில் முதன்மையானவர் என்ற பெருமையை பெறுகிறார். குமரி மாவட்டத்தில் பிறந்து மறைந்த தேவசகாயம் தமிழகத்தின் முதல் புனிதராகவும், குமரி மாவட்டத்தின் முதல் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
Tags:    

Similar News