ஆன்மிகம்
சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவு தூணில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

Published On 2021-11-03 03:58 GMT   |   Update On 2021-11-03 03:58 GMT
நாகை, வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கண்ணீர் மல்க இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களது ஆத்மா சாந்தியடையவும் வேண்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.

தொடர்நது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களை வைத்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள்.

அதன்படி கல்லறை திருநாளான நேற்று நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை புனிதநீர் தெளித்து பிரார்த்தனை நடத்தினார். தொடாந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராயப்பன் கல்லறைதோட்டம் உள்பட நாகையை சுற்றியுள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்துவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.அப்போது வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள பாதிரியார்களின் கல்லறைக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோ ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் இறந்தவர்களின் கல்லறை தோட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News