ஆன்மிகம்
இயேசு

மன்னிக்கும் மனம் வேண்டும்

Published On 2021-10-15 05:12 GMT   |   Update On 2021-10-15 05:12 GMT
திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். கால்நடைகள், நிலபுலன்கள், வேலையாட்கள் என அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தார்கள்.

மூத்த மகன் அமைதியானவன். தந்தைக்கு உதவியாய் இருந்தான். இளையவன் அவனுக்கு நேர் எதிர். உல்லாசப் பேர்வழி. ஒரு நாள் அவன் தந்தையிடம் வந்தான்.

‘அப்பா... நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்’.

‘என்ன முடிவு?’

‘நம்முடைய சொத்தில் எனக்குச் சேரவேண்டிய பாகத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள், நான் போகிறேன்’.

தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவன் கேட்கவில்லை, எனவே தந்தை சொத்தைப் பிரித்து இருவருக்கும் அளித்தார்.

இளையவன் சொத்தையெல்லாம் விற்று பெரும் பணம் திரட்டினான்.

‘வாருங்கள் நாம் வெளியூர் சென்று உல்லாசமாய் இருக்கலாம்’ என்று அவன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் வெளியூர் சென்று விடுதிகளிலும், சூதாட்ட இடங்களிலும் சென்று ஆனந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்.

வருடங்கள் கடந்தன. அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போக, நண்பர்கள் விலகினர். விடுதியிலிருந்தும் துரத்தப்பட்டான்!

செல்வத்தின் மீது நிமிர்ந்து படுத்திருந்த அவன் இப்போது கோணிக்குள் உடல் சுருக்கி தெருவோரத்தில் கிடந்தான். பசி அவனுடைய வயிற்றைக் கிள்ளியது.

‘ஐயா... எனக்கு ஏதாவது ஒரு வேலை தாருங்க ளேன்...’ என்று கேட்டு அவன் வேலை தேடி அலைந்தான், எதுவும் கிடைக்கவில்லை.

கடைசியில் ஒருவர் இரக்கப்பட்டு பன்றிகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தான்.

அந்த நாட்டில் பஞ்சம் பரவத் தொடங்கியது. எனவே அவன் பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டை உண்ணத் தொடங்கினான். அதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உரிமையாளர் அவனை அடித்துத் துரத்தினார்.

அப்போது தான் அவன் தன் தவறை உணர்ந்தான். தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவருடைய வேலைக்காரர்களில் ஒருவராக வாழலாம் என முடிவெடுத்தான். தந்தையின் இல்லம் நோக்கி நடந்தான்.

அழுக்கடைந்த ஆடைகளுடன் ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்ட தந்தை அவனை அடையாளம் கண்டுகொண்டார்! அவனை நோக்கி ஓடினார்.

‘மகனே...’ என தன்னை நோக்கி ஓடி வரும் தந்தையைக் கண்டு மகன் கண் கலங்கினான்.

‘அப்பா... மன்னியுங்கள்... விண்ணகத் தந்தைக்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்து விட்டேன். இனிமேல் எனக்கு உமது மகனாய் இருக்கும் தகுதி இல்லை. என்னை உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவராக எண்ணி உணவளிப்பீரா?’ - அவன் சொல்ல நினைத்திருந்ததை சொல்ல ஆரம்பிக்கும் முன், தந்தை பணியாளரை அழைத்தார்.

‘முதல் தரமான ஆடைகளைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். விரல்களுக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் உடனே அணிவியுங்கள். கொழுத்த கன்றை அடித்து விருந்து வையுங்கள்’.

மாலையில் மூத்த மகன் வயலிலிருந்து வீடு திரும்பினான்.

‘இசை கேட்கிறது, நடனச் சத்தம் கேட்கிறது, என்ன விஷயம்?’ - பணியாளர் ஒருவரிடம் கேட்டான்.

‘உமது தம்பி திரும்பி வந்திருக்கிறார், எனவே தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார்’.

ஒரு உதவாக்கரைக்கு இத்தனை பெரிய விழாவா? அண்ணனின் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டுக்குள் நுழையாமல் வெளியே நின்றான்.

தந்தை வெளியே வந்தார்.

‘மகனே உள்ளே வா... உன் தம்பி திரும்பி வந்திருக்கிறான்’.

‘உம் சொத்தையெல்லாம் அழித்து விட்டு வந்த மகனுக்காக விருந்தா...? ரொம்ப நல்லது. நீங்கள் விருந்து கொண்டாடுங்கள். நான் உள்ளே வரவில்லை’.

‘ஏன் இத்தனை கோபம்?’

‘இருக்காதா? நான் இத்தனை காலம் உம்மோடு இருக்கிறேனே. நான் விருந்துண்டு மகிழ எனக்கு ஒரு ஆட்டுக் குட்டியையாவது நீர் தந்ததுண்டா? இதோ கூத்தடித்து வந்த மகனுக்காய் கன்றை அடிக்கிறீர்’.

‘மகனே... நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். நாம் இப்போது மகிழ்வது தான் முறை. ஏனென்றால், உன் தம்பி இறந்து போயிருந்தான், உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான், கிடைத்துவிட்டான்’ என்றார்.

அண்ணனோ வீட்டுக்குள் நுழைய மனம் இல்லாமல் இருந்தான், தம்பியோ வீட்டுக்குள் தந்தையின் அன்பில் இணைந்திருந்தான்.

விண்ணகத் தந்தையின் அன்பை விட்டு விலகிச் செல்லும் போது, பாவத்தில் விழுகிறோம். அந்த தற்காலிக இன்பங்களே முழுமை என நினைக்கிறோம். அவற்றை விட்டு விலகி மீண்டும் தந்தையின் அன்பில் இணைய விரும்பி வருபவர்களை தந்தை எந்த கேள்வியும் இன்றி அன்புடன் அரவணைக்கிறார்.

நாம் நம் பாவத்தை விட்டு மனம் திரும்பி இறைவனிடம் வரும் மகனாய் இருக்க வேண்டும். திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
Tags:    

Similar News