ஆன்மிகம்
ஓரியூரில் 42 அடி உயர புனித அருளானந்தர் சொரூபம்

ஓரியூரில் 42 அடி உயர புனித அருளானந்தர் சொரூபம் திறப்பு

Published On 2021-10-07 10:07 IST   |   Update On 2021-10-07 10:07:00 IST
திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தரின் 42 அடி உயர சொரூபம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.
திருவாடானை தாலுகா ஓரியூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது. இங்கு புனித அருளானந்தருக்கு 42 அடி உயரத்தில் புதிதாக சொரூபம் நிறுவப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.

இதனை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து வைத்தார். தொழில் அதிபர் சேவியர் பிரிட்டோ புனித அருளானந்தர் சொரூபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அனைத்து கட்டுமானப் பணி களையும் மேற்கொண்ட புனித அருளானந்தர் மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் பால் செங்கோல்ராஜ் கல்வெட்டை திறந்துவைத்தார். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் முன்னிலையில் பங்கு இறைமக்களால் ஜெப வழிபாடு நடத்தப்பட்டது.

இதுகுறித்து அருட் தந்தையர்கள் கூறுகையில், புனித அருளானந்தர் சொரூபம் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதுவரை புனித அருளானந்தருக்கு இதுபோன்று பெரிய அளவிலான சொரூபம் எங்கும் அமைக்கப்படவில்லை.

இங்கு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 4-ந் தேதி புனித அருளானந்தர் மறை சாட்சியாக தன்னுயிர் ஈந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியும், திருப்பவனியும், நற்கருணை ஆசீரும், அன்னதானமும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

Similar News