ஆன்மிகம்
குழந்தை இயேசு

கண்டன்விளை புனித குழந்தை இயேசு தெரசா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-09-27 05:49 GMT   |   Update On 2021-09-27 05:49 GMT
கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத கடைசியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடப்பது வழக்கம்.
கண்டன்விளையில் புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது குழந்தை இயேசு தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கிய உடன் கட்டிய முதல் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத கடைசியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் இந்த வருட திருவிழாவானது இன்று (27-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருக்கொடி பவனியுடன் தொடங்கி 6.30 மணிக்கு சென்னை செலஸ்டின் மல்டி மீடியா இயக்குனரும், அருட்பணியாளருமான எல்பின்ஸ்டன் ஜோசப் தலைமையில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. முன்னதாக காலையில் முன்னோர்கள் நினைவு திருப்பலி, கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட மறைக்கல்வி பணிக்குழு இயக்குனர் வின்சன்ட் எட்வின் அருளுரை நிகழ்த்துகிறார். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலியும், 6-ம் நாள் மாலையில் திருப்பலியின் போது குழந்தைகளுக்கு திருமுழுக்கு சடங்கும் நடைபெறுகிறது.

11-ம் திருவிழா நிறைவு நாளன்று அதிகாலை 5 மணிக்கு கல்லுவிளை பங்கு பணியாளர் அமலதாஸ் தலைமையில் முதல் திருப்பலியும், காலை 8 மணிக்கு பாளை மறை மாவட்ட பணி நிறைவு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், 10 மணிக்கு திருவனந்தபுரம் மறை மாவட்ட அருட்பணியாளர் இஞ்ஞாசி ராஜசேகர் தலைமையில் மலையாள திருப்பலியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் சகாய ஜெஸ்டஸ், இணை பணியாளர் ஸ்டாலின், பங்கு பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் எச்.ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லி மலர், அருட்சகோதரிகள் மற்றும் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

இந்த ஆலய திருவிழா அரசு மற்றும் மறை மாவட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். ஆலயத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஆலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News