ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா

பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா

Published On 2021-09-09 03:48 GMT   |   Update On 2021-09-09 03:48 GMT
பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதன்படி பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது. அன்னை மரியாளின் பிறப்பு நாளாக கருதப்படும் நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.

கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி, பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

திருப்பலிக்கு பிறகு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் மாதாவின் உருவம் வைக்கப்பட்டு பேராலய வளாகத்தில் வலம் வந்தது. தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து ெதாடங்கி வைத்தார். இன்று(வியாழக்கிழமை) பூண்டி மாதா பேராலயத்தில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News