ஆன்மிகம்
இயேசு

கடுகு விதை உவமை

Published On 2021-09-01 07:29 GMT   |   Update On 2021-09-01 07:29 GMT
நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம்
கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு முன் இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் கடுகு விதை உவமையும் ஒன்று.

உவமை

இயேசு, “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

உவமை கருத்து

உலகில் செல்வம், கல்வி, பதவி போன்றவையே நம் வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கின்றன. உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, நாம் இவைகளை நாடித் தேடி ஓடுகிறோம். இவைகளுக்கு நடுவே, இயேசுவின் நற்செய்தி கடுகு விதை போன்று சிறிதாக இருக்கிறது. இறையாட்சியை வாழ்வின் இலக்காக எவரும் கொள்வதில்லை. அதற்கு நாம் முன்னுரிமை அளிப்பதில்லை. அதனால் நற்செய்தி நம் உள்ளத்தில் பதிவதில்லை. ஆனால், சிறிய கடுகு விதையாக நம் மனதிற்குள் விழும் நற்செய்திதான், நமக்கு நிலை வாழ்வை வழங்கக்கூடியது.

ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். நமது உள்ளமே வயல். இயேசுவின் நற்செய்தியே கடுகு போன்ற விதை. உலக தேவைக்காக வாரம் முழுக்க வேறு பணிகளில் ஈடுபடும் நாம், ஓய்வு நாட்களில் மட்டும் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கிறோம் அல்லது வாசிக்கிறோம். இயேசுவின் வார்த்தை நம் உள்ளத்திலுள்ள ஒரு சிறு இடத்தில், கடுகு விதையை போல பதிவாகிறது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து, எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகிறது. இயேசுவின் வார்த்தை உள்ளத்தில் பதிவாகி இருப்பதால், செயல்படத் தொடங்குகிறது.

நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம். உலகின் மற்ற தேவைகளும் அவற்றின் மீது கொண்ட நாட்டமும் குறைகின்றன. நற்செய்தியை கடைப்பிடித்து இறையாட்சியைப் பெறுகிறோம்.

வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும். அதுபோல நம் உள்ளத்தில் இயேசுவின் வார்த்தை வளர்ந்து, அதன் வாயிலாக அன்பு, பரிவு, தன்னடக்கம் பணிவு போன்ற தூய ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகின்றன. துன்பத்தில் தவிப்போருக்கும் தன்னலமின்றி உதவுகிறோம். இதனால், நம் வாழ்வு நம்மை சுற்றியுள்ளோருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. நம் வாழ்வு 30, 60, 100 என்ற அளவில் இறையாட்சியாக நிறைவு பெறுகிறது.

இந்த உவமையை கூறி முடித்த இயேசு, தம் சீடரிடம் “உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம் மலையைப் பார்த்து “இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ” எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்” என்றும், “இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என நம்பிக்கையினால் உலக இச்சைகளை விலக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
Tags:    

Similar News