ஆன்மிகம்
இயேசு

உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகள்

Published On 2021-08-18 04:10 GMT   |   Update On 2021-08-18 04:10 GMT
சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.

“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு” என்று இயேசு கிறிஸ்து கூறினார். தாம் சொன்னபடியே, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.

மகதலா மரியா

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து மரியா அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். (யோவான் 20:11-16)

பெண் சீடர்கள்

ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. (மாற்கு 16:1-8)

ஆண் சீடர்கள்

சீடர்கள் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:36-43)

திருத்தூதர் தோமா

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 20:24-29)

Tags:    

Similar News