ஆன்மிகம்
நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

பத்துக்காணி குருசுமலை திருப்பயண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-04-01 08:54 IST   |   Update On 2019-04-01 08:54:00 IST
பத்துக்காணி குருசுமலை திருப்பயண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
அருமனை அருகே, பத்துக்காணி குருசுமலையில் திருப்பயண விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு திருவிழா கொடியை நெய்யாற்றின்கரை ஆயர் இல்லத்தில் இருந்து இருசக்கர வாகன பேரணியாக குருசுமலைக்கு கொண்டு வந்தனர். மேலும், கடையாலுமூட்டில் இருந்தும் குருசுமலைக்கு இருசக்கர வாகன பேரணி நடந்தது.

பிற்பகல் 3 மணிக்கு ஆனப்பாறை ஆலயத்தில் இருந்து கொடிபயணம் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் விழா கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கொல்லம் மாவட்ட ஆயர் பால் ஆன்டனி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அத்துடன், மலையின் உச்சியில் அருட்பணியாளர் அஜீஷ் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொடி ஏற்றப்பட்டு திருப்பலி நடந்தது.

இரவு குருசுமலை திருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. சங்கனாசேரி மாவட்ட உதவி பேராயர் மார் தோமஸ் தலைமை தாங்கினார். ஆயர் வின்சென்ட் சாமுவேல், வின்சென்ட் பீட்டர், கேரள மாநில அறநிலையதுறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஹரீந்திரன், சிவகுமார், வின்சென்ட், திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மது, குருசுமலை இயக்குனர் வின்சென்ட் பீட்டர் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, கத்தோலிக்க இளைஞர் ஆண்டு விழா நடந்தது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 7-ந் தேதி மாலை 4 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து கொடியிறக்கம், நிறைவு நாள் கூட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குருசுமலை விழா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

Similar News