ஆன்மிகம்
ஆயர் நசரேன் சூசை ஒரு சிறுமிக்கு சாம்பலால் சிலுவை அடையாளமிட்ட போது எடுத்த படம்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

Published On 2019-03-07 09:03 IST   |   Update On 2019-03-07 09:03:00 IST
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரிப்பது வழக்கம்.

தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து, ஏழை- எளியவர்களுக்கு தான தர்மம் உள்ளிட்ட உதவிகளை செய்வார்கள். மேலும் இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக தவக்காலம் கடைபிடிக்கப்படும். கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் வகையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலை மற்றும் மாலையில் சாம்பல் புதன் வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட தலைமைப் ஆலயமான கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று காலை சாம்பல் புதன் வழிபாடு மற்றும் திருப்பலி நடந்தது.

கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் பென்சிகர், ஆயர் செயலாளர் திவ்யன், கோட்டார் மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கேல் ஏஞ்சலுஸ், கோட்டார் பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆண்டன் பிரபு ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.

கடந்த ஆண்டு தவக்கால குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட குருத்தோலைகளை சேகரித்து, அவற்றை எரித்து சாம்பல் தயாரித்து, அந்த சாம்பலால், சாம்பல் புதன் தினத்தில் ஆலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் அருட்பணியாளர்கள் சிலுவை அடையாளமிடுவதுதான் இந்த தினத்தின் சிறப்பம்சமாகும். இதனால்தான் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

அதேபோல் நேற்றும் சாம்பல் புதன் தினம் கடைபிடிக்கப்பட்டது. கோட்டார் பேராலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்கள் நெற்றியில் ஆயர் நசரேன் சூசை மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார்கள். அதைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொண்டனர்.

திருப்பலியின் முடிவில், பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியதையொட்டி தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், ஊதா நிற ஆடை அணிந்து திருப்பலியில் கலந்துகொண்டவர்களின் நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டார்.

இதேபோல் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்குதந்தை விக்டர், திருப்பலியில் கலந்துகொண்டவர்களின் நெற்றியல் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டார்.

இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Similar News