ஆன்மிகம்

இறையருள் தரும் பேரானந்தம்

Published On 2019-03-01 11:30 IST   |   Update On 2019-03-01 11:30:00 IST
எப்போதெல்லாம் கர்த்தருடைய உயர்வு உங்களுக்கு வருகிறதோ உடனே உங்களை எதிர்க்க சத்துரு வருவான் என்பதை மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்’. உபாகமம் 31:8

எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன்.

‘அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமூகம் என்னோடே கூடச் செல்லாமற் போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்’. யாத்திராகமம் 33:15.

ஆம் பிரியமானவர்களே, மோசேயின் இருதயமெல்லாம் கர்த்தருடைய சமூகம் அல்லது அவருடைய பிரசன்னத்தைக் குறித்தே இருந்தது. இஸ்ரவேல் ஜனங்களும், ஆரோனும் இணைந்து பொன் கன்றுக்குட்டியை செய்து வழிபட்டதன் விளைவாக கர்த்தருடைய கோபம்மூண்டது. ‘எனவே இனி நான் உங்களோடு வரேன், என் தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன்’ என்று மோசேயை பார்த்துக் கர்த்தர் கூறின போதுதான் யாத்திராகமம் 33:15 ல் “ஆண்டவரே உம்முடைய சமூகம் என்னோடுகூட செல்லாமல் போனால் எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டு போக வேண்டாம்” என மிகுந்த பாரத்தோடு கேட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தருடைய சமூ கத்தின் மேல் மிகுந்த ஆர்வமுடையவர்களாயிருங்கள். அவருடைய சமூகம் தான் உங்களுக்குப் பேரானந்தம்.

‘ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமூகத்தில் பரி பூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு’. சங்கீதம் 16:11

உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் போவார்

“கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.” II சாமுவேல் 5:20.

கர்த்தர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி தாவீதை இஸ்ரவேலின் மேல் அபிஷேகம் பண்ணினார். கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார் என பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது தாவீதை தேடுவதற்கு வந்தார்கள்.

“தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது அவர்கள் எல்லோரும் தாவீதை தேடும்படி வந்தார்கள்: அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.” II சாமுவேல் 5:17

கர்த்தருடைய பிள்ளையே, இவ்வாண்டு முழுவதும் கர்த்தருடைய சமூகம் எங்களுக்கு முன்பாக செல்லும் அதே வேளையில், உங்களுக்கு முன்பாக செல்லுகிற கர்த்தருடைய சமூகத்தை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு அவருடைய நடத்துதல் அவசியமாகும்.

எப்போதெல்லாம் கர்த்தருடைய உயர்வு உங்களுக்கு வருகிறதோ உடனே உங்களை எதிர்க்க சத்துரு வருவான் என்பதை மறந்து போகாதீர்கள்.

அன்றைக்கு தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தர் வந்தபோது அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என தாவீது விசாரித்தது போல, அவ்வப்போது உங்கள் வீடு களிலோ, பிள்ளைகள் வாழ்விலோ அல்லது உங்கள் வேலை மற்றும் தொழிலிலோ எதிர்ப்புகள் வரும்போது தாவீதைப் போல தேவனிடத்தில் விசாரிக்க மறவாதீர்கள். அன்றைக்கு தாவீது தேவனிடத்தில் விசாரித்தான். ஆகவே தண்ணீர் உடைந்து ஓடுவது போல கர்த்தர் சத்துருக்களை தாவீதுக்கு முன்பாக உடைந்து ஓடப்பண்ணினார்.

வேதம் கூறுகிறது, “பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.” II சாமுவேல் 5:22 என்றாலும் மீண்டும் தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததாக II சாமுவேல் 5:23 சொல்லுகிறது.

பிரியமானவர்களே, உங்களுக்கும், எனக்கும் முன்பாக என் ஆண்டவருடைய சமூகம் இவ்வாண்டு முழுவதும் செல்லப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதே வேளையில் ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும் நம்முடைய சத்துருவை கர்த்தர் மேற்கொள்ள எந்த நேரத்தில் நமக்கு முன்பாக புறப்படுகிறார் என்ற வெளிப்பாடு எல்லா தேவபிள்ளை களுக்கும் தேவை.

முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது சீக்கிரமாய் எழும்பிப்பேர், அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறியடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.” II சாமுவேல் 5:24

ஆம் தேவனுடைய பிள்ளையே, யுத்தம் கர்த்தருடையதாக இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் அவர் யுத்தம் செய்கிற தேவன் என்றாலும், அவர் நமக்கு முன்பாக செல்லுகிற வேளையை அறியும்போது சீக்கிரமாக எழும்பி செயல்பட வேண்டும் என கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.

“பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” I யோவான் 3:8 என்ற வசனத்தின்படி இவ்வாண்டு முழுவதும் உங்கள் ஆவி ஆத்மா சரீரத்திற்கு விரோதமாக உங்கள் குடும்பத்திற்கும் பொருளாதாரத்திற்கும் விரோதமாக அவன் கிரியை செய்ய தொடங்கும் முன்பே செல்வார். சத்துருவை முறியடித்து சகல ஆசீர்வாதங்களால் கிருபையாக நடத்துவார்.

ஆகவே அனுதினமும் அவருடைய சமூகத்தை நாடுங்கள். அவருடைய சமூகம் இவ்வாண்டு முழுவதும் பேரானந்தமாக இருக்கும்.

சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

Similar News