ஆன்மிகம்
திருவிழாவில் சப்பர பவனி நடந்த போது எடுத்த படம். (உள்படம்-புனித அருளானந்தர்)

காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலய திருவிழா

Published On 2019-02-04 08:55 IST   |   Update On 2019-02-04 08:55:00 IST
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவில் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புனித அருளானந்தரின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர்.
காளையார்கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் திருவிழா நேற்று முன் தினம் சிறப்பாக நடைபெற்றது. வருடந்தோறும் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் மாலை நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.

விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை மாலை பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து ஆடம்பர திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினர். பின்பு புனித அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பர பவனி தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து இறுதியாக ஆலயத்தை அடைந்தது.

விழாவில் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புனித அருளானந்தரின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை உதவி பங்குத்தந்தை பிரிட்டோ, விழா குழுவினர், கிராம நிர்வாகத்தினர், பங்கு பேரவையினர் ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் உள்பட 3 போலீஸ் சூப்பிரண்டுகள், காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு தலைமையில் வருவாய்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News