ஆன்மிகம்
புனித பரலோக மாதா

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா

Published On 2021-08-07 04:01 GMT   |   Update On 2021-08-07 04:01 GMT
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ந்தேதி தேர் பவனி, நற்கருணை பவனி, ஆராதனையுடன் நிறைவுபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ந்தேதி தேர் பவனி, நற்கருணை பவனி, ஆராதனையுடன் நிறைவுபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 2-வது ஆண்டாக, ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழாவில் கொடியேற்றம், தேர் பவனி, நற்கருணை பவனி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் கொடியேற்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, ஆலயத்தில் திருப்பலிகள் மட்டும் எளிமையாக நடந்தது. குறைவான உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், காலை, மதியம், இரவில் திருப்பலிகள் நடைபெற்றது. திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் எம்.எஸ்.அந்தோணிசாமி, சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலிகள் நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஆலய வளாகம், தெருக்களில் கடைகள் அமைக்கவும், பக்தர்கள் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு அதிகளவு பக்தர்கள் செல்லாத வகையில், ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News