ஆன்மிகம்

புனித சவேரியாரின் கை எலும்பு கலசத்தில் வைத்து ஊர்வலம்

Published On 2019-03-02 03:09 GMT   |   Update On 2019-03-02 03:09 GMT
வத்தலக்குண்டு அருகே புனித சவேரியாரின் கை எலும்பு கலசத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு அருகே மேலபெருமாள்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரிந்து வருகின்றனர். இதனால் ராணுவ கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இயேசுவின் சீடரான பிரான்சிஸ் சேவியர் என்ற புனித சவேரியார் ஆவார். இவருடைய உடல் கோவாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பல ஆண்டுகளாக கெடாமல் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

அவருடைய உடலில் இருந்து கையை மட்டும் ரோமாபுரிக்கு கொண்டு சென்றனர். அதன் ஒரு பகுதியை அங்கு இருந்து கொண்டு வந்து தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு என்னுமிடத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருடைய கை எலும்பின் ஒரு பகுதி ரோமாபுரியில் இருந்து மேலபெருமாள்கோவில்பட்டிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

பின்னர் பங்கு தந்தை ஜெயராஜ் வீட்டில் இருந்து சவேரியாரின் கை எலும்பின் ஒரு பகுதியை கலசத்தில் வைத்து மலர்களால் அலங்கரித்து, அவருடைய திருவுருவச் சிலையுடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கலசத்தை ஆலயத்தில் வைத்தனர்.

அங்கு மதுரை மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்கு தந்தை ஜெயராஜ், திருத்தொண்டர் ஆண்டனிசெழியன் மற்றும் மேலக்கோவில்பட்டி, ரெட்டியபட்டி, கீழக்கோவில்பட்டி, சின்னுபட்டி, கரட்டுப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News