கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்துவோம் - இலங்கை நம்பிக்கை

Published On 2022-07-16 05:08 GMT   |   Update On 2022-07-16 05:08 GMT
  • சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கு வந்து 2 டெஸ்டில் விளையாடியது.
  • போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் உள்ளது.

கொழும்பு:

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினை, மக்கள் போராட்டம், அரசியல் மாற்றங்கள் என்று நெருக்கடியான சூழல் நிலவுவதால் இந்த போட்டி அங்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் உள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை இலங்கையில் ஆசிய கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று இன்னும் உறுதியாக நம்புகிறோம். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கு வந்து 2 டெஸ்டில் விளையாடியது.

இப்போது பாகிஸ்தான் அணி வந்துள்ளது. போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை' என்றார். இந்த போட்டியை இலங்கையிலேயே நடத்த வேண்டும். அதற்கு தங்களது முழுமையான ஆதரவு உண்டு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News