கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்து அணி

சாப்மேன், பிரேஸ்வெல் அசத்தல் - 2வது டி20 போட்டியில் ஸ்காட்லாந்தை வென்றது நியூசிலாந்து

Published On 2022-07-30 06:18 IST   |   Update On 2022-07-30 06:18:00 IST
  • முதலில் ஆடிய நியூசிலாந்து 254 ரன்கள் குவித்தது.
  • சாப்மேன் 83 ரன்னும், பிரேஸ்வெல் 61 ரன்னும் எடுத்தனர்.

எடின்பர்க்:

நியூசிலாந்து அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி 20 மற்றும் ஒரே ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி எடின்பர்கில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. சாப்மேன் மற்றும் பிரேஸ்வெல் அதிரடியில் மிரட்டினர். இருவரும் அரை சதமடித்தனர்.

சாப்மேன் 44 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்தார். பிரேஸ்வெல் 25 பந்தில் 3 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. அந்த அணியில் கிறிஸ் கிரீவ்ஸ் 37 ரன்னும், ரிச்சி பெரிங்டன் 22 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 2-0 என டி20 தொடரைக் கைப்பற்றியது. மேலும் டி20 போட்டியில் நியூசிலாந்து அடித்த அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News