சினிமா
சிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் முன்னோட்டம்.
சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டேக் டைவர்ஷன்’. ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார். இப்படத்தில் அறிமுக நாயகன் சிவகுமார் ஹீரோவாக நடித்துள்ளார். பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார். 'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .
மேலும் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். இவர் 'நெடுநல்வாடை', 'என் பெயர் ஆனந்தன்' படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பை விது ஜீவா கவனிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும். அப்படி வாழ்க்கையில் ' டேக் டைவர்ஷன் ' என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றார்.