சினிமா
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் உருவாகி இருக்கும் தி மஸ்கிட்டோ பிலாஸபி என்ற படத்தின் முன்னோட்டம்.
வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தி மஸ்கிட்டோ பிலாஸபி. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது.
இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவே தமிழ் சினிமாவின் முதல் "Mumblecore" என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் "Dogme 95" கோட்பாடு இயக்கத்தின் தாக்கம் இப்படத்தில் பெருமளவில் உள்ளது. எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட "தி மஸ்கிட்டோ பிலாஸபி" யில் ரீ டேக்ஸ் என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும் சுற்றுப்புற வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் உள்ளடக்கியது கொசுவின் தத்துவம்.
விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற "லென்ஸ்" திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் இரண்டாவது படம் தான் "தி மஸ்கிட்டோ பிலாஸபி". "ஓடு ராஜா ஓடு" திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெதின் ஷங்கர் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் டேனி சார்ல்ஸ் ஆவார். கன்னட திரையுலகை சேர்ந்த ஐயோ ராமா படத்தின் பின்னணி இசை அமைத்துள்ளார்.