சினிமா

வாக்களிக்கவில்லை என்ற சர்ச்சை - அக்‌‌ஷய் குமார் விளக்கம்

Published On 2019-05-04 14:05 IST   |   Update On 2019-05-04 14:05:00 IST
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், வாக்களிக்காதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #AkshayKumar
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள் அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அப்போது நடிகர் அக்‌‌ஷய் குமாரின் மனைவி வாக்களிக்க வந்தார். ஆனால் அக்‌‌ஷய் குமார் வரவில்லை. இது சர்ச்சை ஆனது.

பிளாங் திரைப்பட திரையிடல் மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அக்‌‌ஷய் குமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாகவே அக்‌‌ஷய் குமார், ‘டாய்லெட்’, ‘எக் ப்ரேம் கதா’, ‘பேட் மேன்’ உள்ளிட்ட சமூக கருத்துகளை தாங்கிய படங்களில் நடித்து வருகிறார். வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.



எனவே ‘வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த அக்‌‌ஷய் இவ்வாறு செய்வதா?’ என்று கேள்விகள் எழுந்தன. மேலும் அக்‌‌ஷய் குமாரிடமும் கனடா நாட்டு குடியுரிமை இருப்பதை இந்த சம்பவத்தோடு முடிச்சு போட்டு செய்திகள் பரவின.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ’என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்கு புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும் மறைத்ததில்லை. யாரிடமும் மறுத்ததும் இல்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்குச் செல்லவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மைதான். நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே செலுத்துகிறேன்.


இத்தனை ஆண்டுகளில் நான் தேசத்தின் மீதான காதலை யாரிடமும் நிரூபிக்கவேண்டிய தேவை இருந்ததில்லை. என் குடியுரிமை குறித்து தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட, சட்டபூர்வமான, அரசியலற்ற என் குடியுரிமை யாருக்கும் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கடைசியாக, இந்தியாவை வலிமையாக்க சிறிய அளவிலான எனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்துவேன்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #AkshayKumar

Similar News