நாயகி பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது.
இதன் காரணமாக, பூர்ணிமா தன்னுடைய சிறு வயதில் பழகிய நபர்களை தேடிச் செல்கிறார். இறுதியில் அவர்களை சந்தித்தாரா? பூர்ணிமா ரவியின் வாழ்க்கை என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் தோல்வி, அழுத்தம் கொடுக்கும் வேலை, குடும்ப பாரம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகனாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்கள் ஒன்றாக பயணிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தந்தையாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் அனுபவ நடிப்பையும், சிறு வயது தோழியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன். அழுத்தமான தருணங்களிலும், தோல்விகளின் போதும் நம்மை எவ்வாறு எதிர் கொண்டு, அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி எப்படி பயணப்பட வேண்டும் என்பதை, அழகாக சொல்லியிருக்கிறார். தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வசனங்கள் பாராட்டும் படி இருக்கின்றன. இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
கிளிஃபி கிரிஸ், இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி சரி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவு
அபி ஆத்விக்கு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலை, அருவி என இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது சிறப்பு.