சினிமா செய்திகள்

 டி.ராஜேந்தர்                               சென்னை விமான நிலையம்

உயர் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்

Published On 2022-06-14 23:28 GMT   |   Update On 2022-06-15 00:40 GMT
  • நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு எனது மகன் சிலம்பரசன்தான் காரணம்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்டியது மறக்க முடியாதது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவர்கள் அறிவுரைப்படி, தனது தந்தைக்கு உயர்சிகிச்சை அளிக்க இருப்பதாகவும், டி ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவரது மகன் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று விமானம் மூலம் டி ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது.

என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜி.கே.வாசன், பச்சமுத்து, நடிகர் கமலஹாசன், ஐசரி கணேஷ் உள்பட பலருக்கும் நன்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறுக்க முடியாது.

இரு முறை தனது குடும்பத்துடன் வந்து சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்.

நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு எனது மகன் சிலம்பரசன்தான் காரணம். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் அவர் தங்கி ஏற்பாடுகள் செய்து வருகிறான்.

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது அவரது மனைவி உஷா உடன் இருந்தார்.

Tags:    

Similar News