சினிமா செய்திகள்

கமல்ஹாசன் -சுதிப்டோ சென்

பாஜகவினருக்கு பிடிக்கிறது என்பதால் இது அவர்களுடைய படம் அல்ல.. கமல்ஹாசனுக்கு 'தி கேரளா ஸ்டோரி' இயக்குனர் பதிலடி

Published On 2023-05-29 13:21 GMT   |   Update On 2023-05-29 13:21 GMT
  • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
  • இப்படம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


தி கேரளா ஸ்டோரி

சமீபத்தில் இப்படம் குறித்த நடிகர் கமல்ஹாசன், "பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் 'இது உண்மைக் கதை' என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல" என்று விமர்சித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்துக்கு 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இயக்குனர் சுதிப்டோ சென் பதிலளித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இது போன்ற விமர்சனங்களுக்கு ஆரம்பத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று, அப்படி செய்வதை நான் நிறுத்திவிட்டேன். ஏனெனில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பிரச்சாரப் படம் என்று கூறியவர்கள் படம் பார்த்த பிறகு தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர். படம் பார்க்காதவர்கள்தான் அதனை விமர்சித்து வருகின்றனர். நம் நாட்டில் மிகவும் முட்டாள்தனமான ஸ்டீரியோடைப்கள் உள்ளன.


சுதிப்டோ சென்

பாஜகவினருக்கு படம் பிடிக்கிறது என்பதால் இது அவர்களுடைய படம் என்று அர்த்தம் அல்ல. உலகம் முழுவதும் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது. அவர்கள் விமர்சிக்க வேண்டுமென்றால், அவர்கள் என்னிடம் நேரடியாக போன் செய்து அதுகுறித்து விவாதிக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒருவர் படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் அதை பிரசார படம் என்று சொல்லி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பாசாங்கு, அற்பத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன வார்த்தைகளைச் சொல்வது? விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News