சினிமா செய்திகள்

தந்தையை தேற்றிட மகள் ஏனோ இன்றில்லையே- பார்த்திபன் பதிவு

Published On 2024-01-27 07:18 GMT   |   Update On 2024-01-27 07:18 GMT
  • பாடகி பவதாரிணி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
  • இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.


இசை விழா ஒன்றுக்காக இலங்கை சென்றிருந்த இளையராஜாவுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்று பவதாரிணியின் உடலை பார்த்து கண் கலங்கினார். 47 வயதே ஆன பாடகி பவதாரிணியின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.


இந்நிலையில், சிறு வயதில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் பொழுது அழும் பவதாரிணியை இளையராஜா தேற்றும் வீடியோவை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை ரீ டுவிட் செய்துள்ள நடிகர் பார்த்திபன், "மகள் அழுகையில் தேற்றிய தந்தையை

தேற்றிட மகள் ஏனோ இன்றில்லையே.

பற்றினைப் பற்றிட

பற்றிடும் சோகத்தீயை

அனைத்திட ஏதுமுளதோ?

இப்பூமியில்…!" என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News