சினிமா செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு இறந்த இயக்குனர் சித்து உடல் அடக்கம்

Published On 2022-09-13 10:37 IST   |   Update On 2022-09-13 10:37:00 IST
  • 1997-ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்கிற படத்தை இயக்கியவர் சித்து.
  • இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரியை சேர்ந்தவர் சித்து என்கிற சித்தேஸ்வரன் (வயது 60). இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனிடம் உதவி இயக்குனராக கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன்பின்னர் 1997-ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்கிற படத்தை இயக்கினார்.

அதை தொடர்ந்து மன்சூர் அலிகானை கதாநாயகனாக நடிக்க வைத்த ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தை மடம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் போனது. தொடர்ந்து சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார்.

தற்போது பாரதிராஜா நடிப்பில் கடைமடை என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார். அதை தொடர்ந்து இயக்குனர் சித்துவின் உடல் அவரது சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இவரின் உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரையை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இயக்குனர் சித்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது தம்பி பொன்.ஆதி.ஆறுமுகம் இயக்கத்தில் இன்னும் சில மாதங்களில் வெளிவர உள்ள பனை திரைப்படத்தில் இறந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News