சினிமா செய்திகள்

சூர்யா

மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.. ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து சூர்யா பதிவு

Published On 2023-05-19 11:10 GMT   |   Update On 2023-05-19 11:10 GMT
  • தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.
  • ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News