சினிமா செய்திகள்
null

உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு அரசியல் பேசணும்னு தோணுது.. நடிகர் ரஜினி

Published On 2023-04-30 05:31 GMT   |   Update On 2023-04-30 05:38 GMT
  • பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது.
  • இதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதல்-மந்த்ரி சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இவ்வளவு பெரிய விழாவில் கலந்து கொண்டு தெலுங்கு பேசி நீண்ட நாட்களாகி விட்டது. நான் ஏதாவது தவறாக பேசினால் மன்னித்துவிடுங்கள். எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஞானம் சொல்கிறது. ஆனால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று அவை சொல்கிறது. எதைச் சொல்லக் கூடாது என்பதை அனுபவம் சொல்கிறது.



உங்களையெல்லாம் இப்படிப் பார்த்தா எனக்கு அரசியல் பேசணும்னு தோணுது. ஆனால், வேண்டாம் ரஜினி... என்று அனுபவம் தடுக்கிறது. நான் பார்த்த முதல் படம் என்டிஆர் நடித்த பாதாள பைரவி. அந்த படம் என் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. எனது முதல் படத்திலேயே இது பைரவி வீடுதானா என்ற டயலாக் வரும். நான் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இயக்குனர் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக கூறினார்.


 



ஆனால், அப்போது கதாநாயகனாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. கதையை ஒரு முறை கேளுங்கள் என்று அந்த இயக்குனர். மேலும் படத்தின் பெயர் பைரவி என்று கூறினார். அந்தப் பெயரை கேட்டதுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். லவகுசா படத்தின் வெற்றிக்காக என்.டி.ஆர் சென்னை வந்தபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது. நடிகர் பாலகிருஷ்ணா கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார். அவர் காரை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும்.



அதனால் நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேநேரம் பாலகிருஷ்ணா செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.



எனது நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருக்கும் போது, அரசியல் பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. எனக்கு அவரை 30 வருடங்களாக தெரியும். சந்திரபாபு நாயுடுவை எனது நண்பர் மோகன்பாபு அறிமுகப்படுத்தினார். அப்போது சந்திரபாபு விரைவில் பெரிய தலைவராக வருவார் என்றும் மோகன் பாபு என்னிடம் அடிக்கடி கூறுவார். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அவருக்கு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் தெரியும்.



ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்கள் சந்திரபாபுவை பாராட்டினர். 22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும் என்று கூறினார்.

Tags:    

Similar News