சினிமா செய்திகள்

வில் திரைப்படத்தின் விமர்சனம்

Published On 2025-10-10 21:55 IST   |   Update On 2025-10-10 21:55:00 IST
  • கருக்கலைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராமன்.
  • நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா அகர்வால். பல வழக்குகளை விசாரித்து வரும் சோனியா அகர்வால், இறந்த ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி ஒரு பெண் வருகிறார். அந்த பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுகிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விக்ராந்திடம் சோனியா அகர்வால் கொடுக்கிறார்.

அந்த பெண் யார் என்பதை தேடி செல்கிறார் விக்ராந்த். இந்த தேடுதலில் அந்த பெண் பொய் சொல்லி சொத்தை அபகரிக்க உருவாக்கப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான பெண் யார் என்பதை தேடி செல்கிறார்.

இறுதியில் சொத்துக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? யார் அந்த பெண்? சொத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் விக்ராந்த், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அந்த பெண் யார் என்பதை தேடி செல்லும் காட்சியிலும், ஆக்ஷன் காட்சியிலும் கவனம் பெற்று இருக்கிறார்.

நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. முழுகதையும் தோளில் தாங்கி பிடித்து இருக்கிறார் அலக்கியா. இவரை சுற்றியே கதை நகர்கிறது. இவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார். மற்றவர்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

கருக்கலைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராமன். திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. சொல்லவந்த விஷயத்தை தெளிவாக சொல்லாதது வருத்தம். ஆரம்பத்தில் வேகம் எடுத்த திரைக்கதை, போக போக வேகம் குறைந்து செல்கிறது. தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம்.

பிரசன்னாவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சௌரப் அகர்வாலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

Tags:    

Similar News