ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கு- அமலாக்கத்துறைக்கு நடிகர் ராணா கடிதம்
- ராணா இன்று ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
- இந்த வழக்கில் அனைத்து நடிகர்களும் தனித்தனியாக ஆஜராக வேண்டும் என சம்மன்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரங்களில் நடித்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர்கள் ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்காக ராணா இன்று ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இந்த வழக்கில் அனைத்து நடிகர்களும் தனித்தனியாக ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான பணிகள் இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் அளிக்க வேண்டுமென நடிகர் ராணா அமலாக்க துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதனால் அவர் இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராக வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரகாஷ் ராஜ் வருகிற 30-ந் தேதி, விஜய் தேவரகொண்டா ஆகஸ்டு 6 மற்றும் லட்சுமி மஞ்சு ஆகஸ்டு 13 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த சட்டவிரோத செயலிகளின் பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை தற்போது விசாரித்து வருகிறது.